உங்க சாதனையை நீங்க தான் மெச்சுக்கணும், வரலாற்றில் யாரும் பேசமாட்டாங்க – விராட் கோலிக்கு மான்டி பனேசர் பதில்

Monty-Panesar-and-Virat-Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரைப் போலவே உலகில் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி 25000+ ரன்களையும் 74 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் கடந்த 2014 முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய அவர் 2017 முதல் 2021 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுப்பேற்ற 2014இல் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பதிவு செய்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் முதல் முறையாக வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அப்படி இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே தெறிக்க விட்ட அவரால் 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 4 ஐசிசி தொடர்களில் ஒன்றை கூட வென்று தர முடியவில்லை.

- Advertisement -

பனேசர் அதிருப்தி:
போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரிலும் ஒரு கோப்பையை கூட வெல்லாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பி இறுதியில் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் விராட் கோலி படிப்படியாக இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி கேப்டனாக ஒரு கோப்பையை கூட வெல்லாத அவரை தோல்வி கேப்டன் அதாவது பிளாப் கேப்டன் என்று சமூக வலைத்தளங்களில் இப்போதும் சிலர் கிண்டலடிப்பதை பார்க்கலாம். ஆனால் உலகக் கோப்பை வெல்லாததை விட எதிரணிகளை அதன் சொந்த மண்ணிலேயே தெறிக்க விட்டு வெளிநாடுகளில் வெற்றி பெறும் அணியாக இந்தியாவின் கலாச்சாரத்தை மாற்றியதே தம்மை பொறுத்த வரை பெரிய சாதனையாக பார்ப்பதாக சமீபத்தில் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

அத்துடன் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வீரராக வென்றுள்ள தாம் 2016 – 2021 வரை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருந்ததற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வென்றதைப் பற்றி யாரும் பார்ப்பதில்லை என்றும் விராட் கோலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மொத்தத்தில் உலக கோப்பையை விட வெற்றிப்பாதையில் நடக்கும் கலாச்சாரத்தை இந்திய அணியில் உருவாக்கியதே தம்மைப் பொறுத்த வரை பெரிய சாதனை என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சாதாரண இருதரப்பு தொடர்களை வென்று ஐசிசி தர வரிசையில் டாப் இடங்களை பிடிக்கும் கேப்டன்களை வரலாற்றில் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மாட்டி பனேசர் ஐசிசி உலக கோப்பைகளை வெல்லும் கேப்டன்களை மட்டுமே அனைவரும் காலத்திற்கும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று விராட் கோலியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

“துரதிஷ்டவசமாக அது தான் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவதில் உள்ள மிகப்பெரிய அழுத்தமாகும். உலகில் யாருமே 2 அல்லது 3வது இடத்தில் இருக்கும் அணிகளை பற்றி நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக நாம் அனைவரும் எப்போதும் ஐசிசி தொடர்களின் வெற்றியாளரை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தோனிக்கு முன்னாடியே நான் அறிமுகமாகிட்டேன். ஆனா அதன் பிறகு.. தோனி மேனியா குறித்து – தினேஷ் கார்த்திக் கருத்து

அவர் கூறுவது போல இரு தரப்பு தொடர்களில் பதிவு செய்யப்படும் வெற்றிகள் 10 வருடத்தில் மறையக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஐசிசி உலக கோப்பையை வென்றால் அந்த கேப்டனின் பெயர் காலத்திற்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement