பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு முழுசா அவர்தான் காரணம். 4 வருஷமா அவரு ஒன்னும் கத்துக்கல – மொயின் கான் விளாசல்

Moin-Khan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை தோற்கடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

அதோடு இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் அணியின் வீரர்களை தாக்கி பேசி வருவதை சமூக வலைதளத்தில் பரவலாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாசிம் அக்ரம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் என பலரும் பாகிஸ்தான் அணியை விமர்சித்து வந்தனர்.

இவ்வேளையில் தற்போது அந்த அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மொயின் கான் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முழு காரணமும் கேப்டன் பாபர் அசாம் தான் என கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் என்று பலரும் கூறியிருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு அணியை வைத்துக்கொண்டு இனி பாகிஸ்தான் இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பது தெரியவில்லை.

- Advertisement -

இந்த தோல்விக்கு பாபர் அசாம் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்தான் கேப்டன். ஒரு பேட்ஸ்மேனாக அவர் கிங் ஆக இருந்தாலும், ஒரு லீடராக அவர் நான்கு ஆண்டுகளாக ஒன்றையும் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் பெற்றிருந்தால் கூட தற்போது நல்ல தலைவராக இருந்திருக்க முடியும். ஆனால் அவர் பெரிய தொடர்களில் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு காரணமாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : சென்னையிலுமா உங்களுக்கு இந்த நிலைமை? மிக்கி ஆர்த்தரை ஓப்பனாக கலாய்த்த மைக்கல் வாகன்

அழுத்தமான சூழ்நிலைகளில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடும்போது அடுத்தடுத்து விக்கெட் வேண்டுமென்றால் பீல்டிங்கை எவ்வாறு மாற்ற வேண்டும்? பந்துவீச்சாளர்களை எவ்வாறு ரொட்டேஷன் செய்ய வேண்டும்? எவ்வாறு எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? என பலவற்றை அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என பாபர் அசாமை விமர்சித்து மொயின் கான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement