சென்னையிலுமா உங்களுக்கு இந்த நிலைமை? மிக்கி ஆர்த்தரை ஓப்பனாக கலாய்த்த மைக்கல் வாகன்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் தெறிக்க விட்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானுக்கு இப்ராஹீம் ஜாட்ரான் 87, ரஹ்மத் ஷா 77*, ரஹ்மனுதுல்லா குர்பாஸ் 65, கேப்டன் ஷாகிதி 48* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவித்து 49 ஓவரின் வெற்றி பெற வைத்தனர். அதை விட இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 7 தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.

- Advertisement -

கலாய்த்த வாகன்:
மறுபுறம் பேட்டிங் துறையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட போதிலும் பந்து வீச்சு துறையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் சுமாராக செயல்பட்ட அந்த அணியை இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

ஏனெனில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” உத்வேக பாடல் ஒலிபரப்பப்பட்டது போல் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒளிபரப்பப்படவில்லை என்று அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்தார்.

- Advertisement -

எனவே அது தங்களின் தோல்வியில் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர் இது ஐசிசிக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது போக எஞ்சிய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இவை அனைத்திற்கும் ஃபைனலில் வந்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால் அதன் பின்பும் சுமாராக செயல்பட்டு மொத்தம் 3 தோல்வியை பதிவு செய்துள்ளதால் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Micheal Vaughan Tweet

இந்நிலையில் “சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்பபடாததே பாகிஸ்தானின் தோல்விக்கு காரணம் என்று கருதுகிறேன்” என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமயம் பார்த்து மிக்கி ஆர்த்தரை கலாய்த்துள்ளார். ஏற்கனவே சுமாரான பவுலிங், பேட்டிங்கால் தோற்கவில்லை மாறாக அகமதாபாத் மைதான டிஜேவிடம் “தில்தில் பாகிஸ்தான்” பாடலை ரோகித் சர்மா ஒலிபரப்ப வேண்டாம் என்று சொன்னதாலேயே பாகிஸ்தான் தோற்றதாக கலாய்த்திருந்த அவர் தற்போது மீண்டும் அதே காரணத்தை வைத்து மிக்கி ஆர்த்தரை கிண்டலடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement