லிட்டன் தாஸிடம் சொன்னது என்ன? திட்டம் போட்டு வம்பிழுந்திங்களா – அனல் பறந்த ஸ்லெட்ஜிங் பற்றி சிராஜ் பதில்

Liton Das Siraj
- Advertisement -

2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெற வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்தியா டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ரன்களை குவித்தனர்.

மேலும் 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அஷ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்ததால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹந்தி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அந்த அணி இந்திய பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் நிகழ்வு:
அதனால் 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முன்னதாக வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து மிரட்டிய முகமது சிராஜ் அதிரடியாக விளையாடி சவாலை கொடுக்க முயன்ற நட்சத்திர வீரர் லிட்டன் தாஸை ஸ்லெட்ஜிங் செய்து அடுத்த பந்திலேயே அவுட்டாக்கினார். அவரது வார்த்தைகளால் சூடான லிட்டன் தாஸ் “கேட்கவில்லை இன்னும் சத்தமா சொல்லுங்க” என்ற வகையில் பதிலடி கொடுத்தாலும் அதன் காரணமாக கவனத்தை இழந்து அடுத்த பந்திலேயே போல்ட்டாகி சென்றார்.

இந்நிலையில் 30 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அதிரடியாக 24 ரன்கள் எடுத்ததால் இது டி20 கிரிக்கெட் இல்லை டெஸ்ட் கிரிக்கெட் என்பதை மனதில் வைத்து சற்று பொறுமையாக விளையாடுங்கள் என்று தான் லிட்டன் தாஸிடம் சொன்னதாக 2வது நாள் முடிவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முகமது சிராஜ் வேறு எதுவும் தவறாக பேசிக் கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் திட்டம் போட்டு ஸ்லெட்ஜிங் செய்யவில்லை என்று தெரிவிக்கும் அவர் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய பந்து வீச்சில் கண்டுள்ள முன்னேற்றத்தை பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இல்லை சார். நாங்கள் அதற்காக தனியாக திட்டம் போடவில்லை. அந்த தருணத்தில் தவறாகவும் ஏதும் சொல்லவில்லை. இது டி20 கிரிக்கெட் இல்லை டெஸ்ட் கிரிக்கெட். எனவே சற்று பொறுமையுடன் விளையாடுங்கள் என்று தான் அவரிடம் அந்த சமயத்தில் நான் சொன்னேன். 2018 வாக்கில் எனது பந்துகள் உள்ளே செல்லாமல் நின்று விட்டன. அந்த சமயங்களில் என்னால் அவுட் ஸ்விங்கர் பந்துகளை மட்டுமே வீச முடிந்ததால் மிகவும் குழப்பமடைந்தேன். அதன் பின்பு தான் ஓபல் ஸீம் டெலிவரிகளை வீசுவதற்கு கற்றுக்கொண்டேன்”

“உள்ளே வரும் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கும். எனவே அந்தப் பந்தின் மீது நான் முழுமையான நம்பிக்கை வைத்து பயிற்சி எடுத்து வெற்றி கண்டு வருகிறேன். மேலும் இந்த பிட்ச்சில் ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீச வேண்டியுள்ளது. ஏனெனில் பந்துகள் மிகவும் குறைவான உயரத்தில் வருவதுடன் சுழல்கிறது. அதனால் இங்கு நேராக வீசினால் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்கள் எல்பிடபிள்யு முறையில் விக்கெட்டுகள் எடுக்க முடியும்”

இதையும் படிங்க: இந்திய அணி இன்னைக்கு இந்த நிலைமைல இருக்க காரணமே ஐ.பி.எல் தான் – பிராட் ஹாக் குற்றச்சாட்டு

“அதனால் ஒரே இடத்தில் வீச வேண்டும் என்பதை என்னுடைய பந்து வீச்சு அணுகுமுறையாகும். ஏனெனில் இந்த விக்கெட்டில் நீங்கள் நிறைய முயற்சித்தால் ரன்களைத் தான் வாரி வழங்குவீர்கள். எனவே ஒரு இடத்தில் பந்து வீச வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாகும். அதை பின்பற்றி நான் வெற்றியும் கண்டுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement