
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அத்தொடரில் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைவதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். அதனால் அவரால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை.
அத்தொடரில் ஷமி விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. அதைத்தொடர்ந்து குணமடைந்த அவர் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடினார். அதனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வு செய்யப்பட்ட அவர் இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்கையும் ஆற்றினார்.
ஆனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் கழற்றி விடப்பட்ட அவர் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மாவை போல் அவரையும் தேர்வுக்குழு கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட முயற்சிப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அது பற்றி கேட்டதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தது பின்வருமாறு. “ஷமி பற்றி என்னிடம் எந்த அப்டேட்டும் இல்லை. கடைசியாக துலீப் கோப்பையில் விளையாடிய அவர் கடந்த 2 – 3 வருடங்களாக நிறைய கிரிக்கெட்டில் விளையாடவில்லை. பெங்கால் அணிக்காக அவர் ஒரு ரஞ்சிக் கோப்பை மற்றும் துலீப் கோப்பை போட்டியில் விளையாடினார் என்று நினைக்கிறேன்”
“திறமையான வீரராக அவரால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில் தமது ஃபிட்னஸ் பற்றிய விவரங்களை கேட்காமலேயே தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி கழற்றி விட்டுள்ளதாக முகமது ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: விராட், ரோஹித்துக்கு 2027 உ.கோ கேரண்டி கிடையாது.. அது நல்லா அமைஞ்சா பாக்கலாம்.. கம்பீர் பேட்டி
“என்னுடைய ஃபிட்னஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய ஃபிட்னஸ் பற்றி அவர்களுக்கு தெரிவிப்பவர் நான் அல்ல – அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும். என்னால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமேயானால் ஏன் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது? ஒருவேளை நான் ஃபிட்டாக இல்லையெனில் இந்நேரம் என்சிஏவில் இருப்பேன். ரஞ்சிக் கோப்பையில் விளையாட மாட்டேன்” என்று கூறினார்.