
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி மிகவும் தரமான பவுலராக பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போது அவரை இந்திய அணி நிர்வாகத்தினர் கழற்றி விட்டு வருகிறார்கள். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் ஹர்திக் பாண்டியா காயமடைந்த போது விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த வாய்ப்பில் அனலாக பவுலிங் செய்த அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரின் போது லேசான காயத்தைக் கொண்டிருந்த அவர் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக்கொண்ட ஷமி கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குள் குணமடையாத அவரால் ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று ஷமியை சொல்லி தேர்வுக்குழுவினர் கழற்றி விட்டார்கள். அதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய ஷமி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
ஆனாலும் அடுத்து நடைபெறும் ஆசியக் கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தம்மை கழற்றி விட நினைப்பவர்களுக்கு ஷமி பதிலடி கொடுத்துள்ளார். 2027 உலகக்கோப்பை வெல்வதே தம்முடைய லட்சியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “யாருக்காவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்”
“என்னுடைய ஓய்வால் யாருடைய வாழ்க்கையாவது எளிதானால் அதை என்னிடம் சொல்லுங்கள் நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய ஓய்வை விரும்பும் அளவுக்கு யாருடைய வாழ்வின் குறுக்கே நான் பாறையாக நிற்கிறேன்? எனக்கு அலுப்புத்தட்டும் நாளில் நானே ஓய்வு பெறுவேன். என்னை தேர்ந்தெடுக்காதீர்கள், ஆனால் நான் கடினமாக உழைப்பேன். என்னை சர்வதேச கிரிக்கெட்டில் தேர்ந்தெடுக்காதீர்கள். நான் உள்ளூரில் விளையாடுவேன்”
“நான் தொடர்ந்து எங்கேயாவது விளையாடுவேன். உங்களுக்கு அலுப்பு தட்டுவதாக நினைக்கும் போது ஓய்வு பற்றிய முடிவை எடுப்பீர்கள். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற என்னுடைய ஒரு கனவு மட்டுமே மீதமிருக்கிறது. நான் உலகக் கோப்பையை வென்று வீட்டுக்கு எடுத்து வரும் அணியில் அங்கமாக இருக்க விரும்புகிறேன். 2023இல் நாங்கள் அதை நெருங்கினோம்”
இதையும் படிங்க: 2011 உ.கோ ஃபைனலில் யுவிக்கு மேலே தோனியை.. இந்த 2 காரணத்தால் தான் ப்ரோமோட் பண்ணோம்.. சச்சின்
“2023 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற உணர்வு எங்களிடமிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக வென்று வந்ததால் நாக் அவுட்டில் ஒரு பயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆர்வம் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கை எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. அதனால் அந்த கனவு நிஜமாகியிருக்கும். ஆனால் அது என்னுடைய அதிர்ஷ்டத்தில் இல்லாமல் போனது” என்று கூறினார்.