இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரெடிட் சமூக வலைதளப் பக்கத்தின் தூதுவராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவ்வப்போது அவர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் சுமாரான ஃபார்மில் இருந்த தோனியை 4வது இடத்தில் விளையாட வைத்த காரணம் என்ன? என்று சச்சினிடம் ஒரு ரசிகர் கேட்டார்.
அந்தத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 275 ரன்களை துரத்தியது. அப்போது வீரேந்திர சேவாக் 0, சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். நங்கூரமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 35 ரன்கள் அவுட்டானார். அப்போது அடுத்ததாக நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2011 உலகக் கோப்பை பின்னணி:
ஆனால் அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி கௌதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவை தூக்கினார். கௌதம் கம்பீர் 97 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மறக்க முடியாத சிக்சருடன் 91* (79) ரன்கள் விளாசிய தோனி அபார ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக் கோப்பையை வென்ற சாதனை படைத்தது.
மேலும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியாவை படைத்தது. அது பற்றி “ஹாய் சச்சின். உலகக் கோப்பை ஃபைனலில் யுவ்ராஜ்க்கு மேலே எம்எஸ் தோனியை ப்ரமோட் செய்தது உங்களுடைய ஐடியா என்று சேவாக் தெரிவித்திருந்தார். அது உண்மையா? அந்த மாற்றுத் திட்டத்திற்கான காரணம் என்ன?” என்று ரசிகர் கேட்டார்.
சச்சின் விளக்கம்:
அதற்கு “தோனியை பேட்டிங் ஆர்டரில் மேலே அனுப்பும் ஐடியாவின் பின்னணியில் 2 காரணங்கள் இருந்தன. எதிரணியின் 2 ஆஃப் ஸ்பின்னர்களை அப்செட் செய்வதற்கு இடது -வலது கை பேட்ஸ்மேன்கள் (கம்பீர் – தோனி) தேவைப்பட்டது. அத்துடன் முரளிதரன் சிஎஸ்கே அணிக்காக (2008 – 2010) விளையாடினார். தோனி அவரை 3 வருடங்களில் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: என் கேரியர் முடியப்போகுது.. அதுக்கு ஃபிட்டான என்னால் ஆசியக் கோப்பையில் ஆட முடியாதா? ஷமி ஆதங்கம்
அதாவது சிஎஸ்கே அணியில் விளையாடியதால் யுவ்ராஜை விட முரளிதரனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். மேலும் கம்பீர் – யுவ்ராஜ் இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது இலங்கை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். அந்த 2 விஷயங்களை தவிர்ப்பதற்காகவே தோனி 4வது இடத்தில் களமிறக்கப்பட்டதாக சச்சின் கூறுவது குறிப்பிடத்தக்கது.



