
ரஞ்சிக் கோப்பையில் 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தூரில் நவம்பர் 13ஆம் தேதி துவங்கிய எலைட் குரூப் சி பிரிவின் ஒரு போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. அந்த போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து பெங்கால் அணிக்காக விளையாடுகிறார்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் சபாஷ் அகமது 92, கேப்டன் மஜும்தார் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேசத்துக்கு அதிகபட்சமாக கெஜ்ராலியா, ஆரியன் பாண்டே தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய மத்திய பிரதேசத்தை 167 ரன்களுக்கு பெங்கால் சுருட்டி வீசியது.
அதிகபட்சமாக சுபாஷ் சேனாதிபதி 47, ரஜட் படிடார் 41 ரன்கள் எடுத்த நிலையில் பெங்கால் அணிக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக 360 நாட்கள் கழித்து போட்டியில் பந்து வீசிய அவர் 19 ஓவரில் 4 மெய்டன் உட்பட 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
பின்னர் களம் இறங்கிய பெங்கால் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 276 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு டாப் ஆர்டரில் கராமி 40, ரித்திக் சாட்டர்ஜி 52, சுதிப் சாட்டர்ஜி 40, ரிதிமான் சஹா 44 ரன்கள் எடுத்தார்கள். அதே போல 10வது இடத்தில் முகமது ஷமி அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 (36) ரன்களை 102.78 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து தம்முடைய அணியை பலப்படுத்தினார்.
கடந்த காலங்களில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி பேட்டிங்கில் கணிசமான ரன்கள் குவித்து இந்தியாவின் சில வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2021 லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ராவுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஷமி அரை சதமடித்து இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல இப்போட்டியிலும் 37 ரன்கள் குவித்துள்ள அவர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திரும்ப வந்து விட்டேன் என்ற வகையில் கம்பேக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முன் விராட் கோலிக்கு நேர்ந்த சோகம் – வெளியான தகவல்
அதன் காரணமாக அடுத்த நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட அதிகப்படியான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இந்தப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு அனுபவ் அகர்வால், குமார் கார்த்திகேயா தலா 4 விக்கெட் எடுத்தார்கள். இறுதியில் மத்திய பிரதேசம் 338 என்ற இலக்கை துரத்தி வருகிறது.