பார்மின்றி தவித்த எனக்கு புஜாரா தான் ஹெல்ப் பண்ணாரு – வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் வீரர்

Pujara - Rizwan County
- Advertisement -

இங்கிலாந்தின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டிவிஷன் 2 பிரிவில் சசக்ஸ் அணிக்காக இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீரர் செட்டேஸ்வர் புஜாரா விளையாடி வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்திய டெஸ்ட் அணியில் பொறுமையின் சிகரமாக எதிரணி பவுலர்களின் பொறுமையை சோதித்து ரன்களை குவித்த புஜாரா இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கடந்த 2019இல் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்ட்ரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

Pujara County

- Advertisement -

அதில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இருப்பினும் அதன்பின் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் மோசமான பார்மில் திணறிய அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது.

புஜாராவின் விஸ்வரூபம்:
மேலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 34 வயதை கடந்துவிட்ட அவருக்கு பதில் இனிமேல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது குறைவு என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார் போல் சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில் மீண்டும் திணறிய அவரை நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரிலும் எந்த அணியும் வாங்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தொடங்கிய அவர் முதல் போட்டியிலேயே 2 வருடங்கள் கழித்து இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பினார்.

Pujara County Hat Trick

அதோடு நிற்காமல் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து 2 சதங்கள் 2 இரட்டை சதங்கள் உட்பட 717* ரன்களை விளாசி ரன் மழை பொழிந்து வரும் அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2-வது பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார். இப்படி முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ள அவரை வரும் ஜூலை மாதம் இதே இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

புஜாரா ஹெல்ப்:
முன்னதாக இந்த தொடரில் புஜாரா விளையாடும் அதே சசக்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகம்மது ரிஸ்வானும் விளையாடி வருகிறார்.  அண்டை நாடுகளாக இருந்தாலும் பரம எதிரிகளாக பாவிக்கும் இவ்விரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் துர்ஹாம் அணிக்கெதிராக இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களிடையே வைரலானது. அப்போட்டியில் புஜாரா 203 ரன்களும் ரிஸ்வான் 79 ரன்களும் எடுத்தனர்.

Rizwan-2

இந்நிலையில் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஆரம்பத்தில் 22, 0, 4 என சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்த முஹம்மது ரிஸ்வான் அதன்பின் புஜாராவின் உதவியுடன் பார்முக்கு திரும்பியதாக வெளிப்படையாக பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “சீக்கிரமாகவே அவுட்டான பின்பு புஜாராவிடம் நான் பேசினேன். அவர் எனக்கு ஒருசில ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக உடம்பை ஒட்டி விளையாட்டு யுக்தியை சொல்லிக் கொடுத்தார். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரும்பாலும் விளையாடும் நான் வெள்ளை பந்து பெரிதாக ஸ்விங் ஆகாது என்பதால் உடம்புக்கு வெளியே விளையாடும் யுக்தியை பயன்படுத்துவேன்”

- Advertisement -

“எனவே இந்த தொடரில் அதேபோல விளையாடி 2 முறை ஒரே மாதிரியாக அவுட்டானேன். அதன்பின் வலை பயிற்சியின் போது அவர் என்னிடம் “ஆசியாவில் நாம் விளையாடும் போது பந்தை டிரைவ் அடிக்க தள்ளப்படுவோம். ஆனால் இங்கு அதை செய்யாமல் உடம்பை ஒட்டியவாறு விளையாட வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியது உதவியாக இருந்தது. அதுபோன்ற ஆலோசனைகளை தான் அவர் என்னிடம் வழங்கினார்.

அவர் அன்பானவர், அதீத கவனத்தையும் தெளிவையும் கொண்டவர். அவரிடமிருந்து அதை நீங்கள் கற்றுகொள்ளலாம். எனது கேரியரில் மிகவும் கவனம் செலுத்தும் வீரர்களாக நான் பார்த்தவர்களில் யூனிஸ் கான், ஃபாவத் ஆலம் ஆகியோருடன் புஜாராவும் சேர்ந்துள்ளார். அதேபோல் என்னிடமிருந்து அவர் என்ன கற்றுக் கொண்டார் என நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என சிரித்துக்கொண்டே கூறினார்.

இதையும் படிங்க : இப்படியா பண்ணுவீங்க? இப்படியே போனால் சரிவராது – லக்னோ வீரர்களை சுளுக்கெடுத்த கம்பீர் பேசியது என்ன?

பரம எதிரிகளாக பாவிக்காமல் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனைகளைப் பெற்று பாகிஸ்தான் வீரர் முன்னேற்றம் அடைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெருமையான அம்சமாகும். மேலும் இவ்விரு வீரர்களும் ஒன்றாக இணைந்து விளையாடுவது இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

Advertisement