- Advertisement -
உலக கிரிக்கெட்

16/3 டூ 448.. பாகிஸ்தானிடம் வீணடித்த வங்கதேசம்.. கானல் நீரான முகமது ரிஸ்வானின் 44 வருட சாதனை கனவு

பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அசாம் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 16/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தான் அணியை 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கிய சாய்ம் ஆயுப் 56 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

சொதப்பிய வங்கதேசம்:

மறுபுறம் அவருடன் சேர்ந்து விளையாடிய சௌட் ஷாக்கீல் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து சவாலை கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் நங்கூரமாக விளையாடி தனது பங்கிற்கு வங்கதேச பவுலர்களை அடித்து அரை சதமடித்தார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல வங்கதேச பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது பிரிந்தது.

அதில் சௌட் ஷாக்கீல் சதமடித்து 9 பவுண்டரியுடன் 141 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ஆகா சல்மான் 19 ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து வங்கதேச பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய முகமது ரிஸ்வான் சதமடித்து 150 ரன்களை தாண்டியதால் இரட்டை சத்தத்தை தொடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் பாகிஸ்தான் 448/6 ரன்கள் எடுத்திருந்த போது தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ஷான் மசூட் அறிவித்தார்.

- Advertisement -

கானல் நீரான சாதனை:

அதனால் இரட்டை சதத்தை தவறவிட்ட முகமது ரிஸ்வான் 171*, ஷாஹீன் அப்ரிடி 29* ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக சாதனை படைக்க ரிஸ்வானுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு கானல் நீராக கரைந்து போனது. குறிப்பாக தஸ்லீம் ஆரிப் (210* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1980), இம்தியாஸ் அகமது (209, நியூசிலாந்துக்கு எதிராக, 1955) ஆகியோர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்களாக டாப் 2 இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க: இந்த காரணத்தால் இப்போ ஆஸி மக்கள் கோலியை விட ரிஷப் பண்ட்டை விரும்புறாங்க.. ஹைடன் பேட்டி

ஒருவேளை டிக்ளர் செய்யாமல் போயிருந்தால் நன்கு செட்டிலாயிருந்த ரிஸ்வான் மேற்கொண்டு 40 ரன்கள் அடித்து தஸ்லீம் ஆரிஃபின் 44 வருட சாதனையை உடைத்திருப்பார் என்றே சொல்லலாம். மறுபுறம் 16/3 என்று பாகிஸ்தானை கட்டுப்படுத்திய வங்கதேசம் மேற்கொண்டு 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து நல்ல துவக்கத்தை வீணடித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கி அந்த அணி 2வது நாள் முடிவில் 27/0 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -