
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் 30 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்ஸில் வெறும் 124 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது.
அது போக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திடீரென சாய் சுதர்சனை கழற்றி விட்டு வாஷிங்டன் சுந்தரை 3வது இடத்தில் விளையாட வைத்தது தோல்விக்கு மற்றொரு காரணமானதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். யாருக்குமே கம்பீர் நிலையான வாய்ப்புகளைக் கொடுக்காததால் இந்திய வீரர்கள் தங்களுடைய இடம் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இருப்பதாகவும் கைஃப் தெரிவித்துள்ளார். அப்படி பயத்துடன் விளையாடினால் எப்படி வெற்றி பெற முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்பதாக உணரவில்லை. யாருக்குமே ஆதரவு இல்லை என்பதால் அனைத்து வீரர்களும் பயத்துடன் விளையாடுகிறார்கள். யாருமே சுதந்திரத்துடன் விளையாடுவதில்லை. ஏனெனில் சதத்தை அடித்த பின்பும் சர்ப்ராஸ் கான் இடம் உறுதியாகவில்லை. சதத்தை அடித்த பின்பும் அவரால் கம்பேக் கொடுக்க முடியவில்லை”
“சாய் சுதர்சன் கடைசிப் போட்டியில் 87 ரன்கள் அடித்தும் அதற்கடுத்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அந்த வகையில் இந்திய அணியில் நிறைய குழப்பம் நிலவுகிறது என்று நினைக்கிறேன். வீரர்கள் தங்களைத் தாங்களே நம்பக்கூடிய சூழ்நிலை இல்லை. அணியில் பாதுகாப்பாற்ற நிலைமையே இருக்கிறது. அப்படி பாதுகாப்பாற்ற நிலை இருக்கும் போது உங்களால் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அசத்த முடியாது”
“கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஏன் சுந்தர் நன்றாக விளையாடினார்? ஏனெனில் அவர் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட சென்னையில் வளர்ந்து வந்துள்ளார். அவருக்கு எப்படி காலைப் பயன்படுத்த வேண்டும், எந்தப் பந்தை மென்மையானக் கைகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரிந்துள்ளது. சாய் சுதர்சனும் சென்னையில் இருந்து வந்தவர்”
இதையும் படிங்க: அதை மறந்து போன இந்திய அணி ப்ராக்டீஸ் பண்ணனும்.. வெளிநாட்டு டீம்ஸ் நம்மள அடிக்கிறாங்க.. அஸ்வின் கோரிக்கை
“அதனால் ஒருவேளை சுதர்சன் 3வது இடத்திலும் சுந்தர் 8வது இடத்தில் விளையாடியிருந்தால் நாம் போட்டியை வென்றிருப்போம். சென்னையில் இருந்து வந்துள்ள சுதர்சனும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்வார். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் கடைசிப் போட்டியில் 87 ரன்கள் அடித்தார் ஆனாலும் அவருக்கு அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறினார்.