தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியில் தோற்றது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட்வாஷ் தோல்வியை சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான அமைக்கப்பட்டிருந்த பிட்ச்கள் முக்கிய காரணமானது.
அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. ஏனெனில் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று தாங்கள் தான் கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வதில் புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள்.
அடிக்கும் வெளிநாட்டு அணிகள்:
ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுவதால் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டதாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மறுபுறம் இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்த வெளிநாட்டு அணிகள் தேவையானப் பயிற்சிகளை எடுத்து இந்தியாவை வீழ்த்துவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.
எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய கழுத்தை நீட்டி தற்போதைய சகாப்தத்தில் மற்றுமொரு போட்டியில் ஸ்பின் பவுலிங் நன்றாக போராடியுள்ளது என்று சொல்வேன். அதற்காக அமோல் மஜும்தார் அல்லது பிசிசிஐ தலைவர் மிதுன் மன்காஸ் ஆகியோருடையப் பெயர்களை நான் எடுக்கலாம்”
அஸ்வின் கோரிக்கை:
“கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பெயரை எடுக்கிறேன். ஒருவேளை இதே பிட்ச்சில் அவர்கள் விளையாடியிருந்தால் போட்டி 4 நாட்கள் வரை சென்றிருக்கும். ஆனால் கொல்கத்தாவில் விளையாடிய இரு அணிகளின் 16 பேட்ஸ்மேன்களில் 3 – 4 பேர் மட்டுமே பந்தை நன்றாக தடுத்தார்கள். நீங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாட விரும்பினால் சுழலுக்கு எதிராக விளையாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் விளையாடாதீர்கள்”
இதையும் படிங்க: இந்திய அணியின் 3 பார்மேட்டுக்கும் சுப்மன் கில் கேப்டனாக மாறினால் செட்டாகாது – அபினவ் முகுந்த் கருத்து
“தற்சமயத்தில் உலக அரங்கில் நாம் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறந்த வீரர்களாக இல்லை. இந்தியாவை விட பெரும்பாலான மேற்கத்திய அணிகள் சிறந்தவர்களாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் இந்தியாவிற்கு வரும் போது சுழலுக்கு எதிராக அதிகம் பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் நாம் அதிகம் எடுப்பதில்லை. தற்சமயத்தில் நமது வேகப்பந்து வீச்சு பல்வேறு மைதானங்களில் மேலானதாக இருக்கிறது. ஏனெனில் நாம் அதை சவாலாக கருதுகிறோம். ஆனால் ஸ்பின் பந்துகளை சவாலாக கருதி பயிற்சி எடுப்பதில்லை” என்று கூறினார்.



