
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன் பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் அவரை மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அதனால் பின்னடைவை சந்தித்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பிலும் கடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவரை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் கடைசி நேரத்தில் விராட் கோலி காயமடைந்ததால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் அசத்திய காரணத்தால் அவருக்கு 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உதவினார். அதே வேகத்தில் 2025 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்படியிருந்தும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்காத இந்திய அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா போல முதுகில் குத்தியுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இளம் வீரர்கள் தற்போது ரோல் மாடலைத் தேடிக் கொண்டிருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை விட வேறு யாரையும் பார்க்க வேண்டியதில்லை. அவர் டெஸ்ட் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்”
“அதற்காக சோகமாக இல்லாத அவர் ஊடகங்களில் எதுவும் சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டார். மாறாக கொல்கத்தாவில் கேப்டனாக இருந்தேன், அங்கேயும் என்னைத் தக்க வைக்காமல் என்னுடைய முதுகில் குத்தினார்கள் என்று ஸ்ரேயாஸ் தமக்குள்ளேயே சொல்வார். அங்கிருந்து நகர்ந்த அவர் தற்போது தம்முடைய பேட்டால் பேசுகிறார். அவரை மொத்த உலகமும் பாராட்டுகிறது. பஞ்சாப்பை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள அவரைப் போன்ற ஹீரோ வேண்டும். சாய் சுதர்சன் சிறப்பான வீரர் என்பதில் சந்தேகமில்லை”
இதையும் படிங்க: 227 ரன்ஸ்.. 7 வருடம்.. ஆர்சிபி கனவில் மண்ணை அள்ளிப்போட்ட ரிஷப் பண்ட்? லக்னோவுக்காக மாஸ் சாதனை
“ஆனால் ஒரு ஐபிஎல் தொடரில் அசத்தியதற்காக அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் 2023 உலகக் கோப்பையில் 550 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியில் பங்காற்றியது உட்பட நீண்ட காலமாக அசத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 514* ரன்கள் அடித்துள்ள அவர் கேப்டனாக அசத்தி வருகிறார். இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை வைத்து ஒருவரை தேர்ந்தெடுத்துள்ள நீங்கள் மற்றொருவரை தேர்ந்தெடுக்கவில்லை” என்று கூறினார்.