
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2023 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையில் ஃபைனல் சென்ற இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற காரணத்தால் அவர் 2027 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்ற சந்தேகம் தேர்வுக்குழு இப்போதே கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக்கோப்பையில் ரோஹித், விராட் கோலி விளையாடுவதற்கான வாய்ப்பு விரைவாக குறைந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில் தற்சமயத்தில் ஒருநாள் கேப்டன்ஷிப்பை விரும்ப மாட்டார் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட நிலையில் ரோஹித்திடமிருந்து வலுக்கட்டாயமாக கேப்டன்ஷிப்பை பறித்து அவரிடம் கொடுப்பது அழுத்தத்தை உண்டாக்கும் என்று கைஃப் தெரிவித்துள்ளார். எனவே இம்முடிவு கில் மற்றும் இந்திய அணிக்கு ஆப்பாக அமையலாம் என்று விமர்சிக்கும் கைப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு 2027 உலகக் கோப்பைக்கு பின்பு தான் நடக்கும் என்று நினைத்தேன்”
“நல்ல தரத்தைக் கொண்டுள்ள ரோஹித் தன்னுடைய ஃபிட்னஸில் வேலை செய்துள்ளதால் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளார். ஆனால் தற்போது அனைத்தும் பாரமும் கில் மேலே விழுந்துள்ளது. அனைத்தையும் அவர் வேகமாக பெறுகிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் அனைத்து பொறுப்பையும் பெறுவது பின்னடைவை ஏற்படுத்தலாம்”
“கில் மேலே பாரத்தை போடாதீர்கள் என்பதே என்னுடையக் கருத்தாகும். டெஸ்ட் அணியின் கேப்டனாக 4வது இடத்தில் விளையாடும் அவர் ஆசியக் கோப்பையில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதனால் சூரியகுமாருக்கு பின் டி20 கேப்டனாக போகும் அவரை இப்போதே நீங்கள் ஒருநாள் அணியின் கேப்டனாக்கி உள்ளீர்கள். ஒரு வீரர் எப்போதும் இப்படி கேப்டன்ஷிப் கேட்க மாட்டார். சுப்மன் கில் கேப்டன்ஷிப்பை விரும்பவில்லை என்பதை அனைவரும் அறிவோம்”
இதையும் படிங்க: கேள்வி கேட்பாங்கன்னு கம்பீர் தான்.. விராட், ரோஹித், அஸ்வினை ரிட்டையராக வெச்சுட்டாரு.. திவாரி விளாசல்
“ஆனால் அஜித் அகர்கர் உட்பட அனைவரும் அதிகம் எதிர்பார்த்து அவரை அழுத்தத்திற்குள் தள்ளுகிறீர்கள். ரோஹித் என்ன தவறு செய்தார்? உண்மையில் அவருக்கு நீண்ட நாள் கேப்டன்ஷிப் கிடைக்கவில்லை. முழுமையாக 4 வருடம் கூட கேப்டனாக இல்லை. நல்ல பேட்ஸ்மேனான அவர் கேப்டனாக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவரிடம் கேப்டன்ஷிப்பை பறிப்பது வலது கையை இழப்பது போன்ற உணர்வைக் உண்டாக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் விளையாட விரும்புவாரா என்பதே எனக்கு சந்தேகமாகும்” என்று கூறினார்.