இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா சாதாரண வீரராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இத்தனைக்கும் அவர்கள் 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.
இருப்பினும் 2027ஆம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா என்ற சந்தேகம் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விடத் துவங்கியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கௌதம் கம்பீர் தான் ஓய்வு பெற வைப்பதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். ஏனெனில் அவர்களைப் போன்ற சீனியர்கள் பயிற்சியாளரின் முடிவுகளை கேள்வி கேட்கும் அந்தஸ்தைக் கொண்டுள்ளதாக திவாரி கூறியுள்ளார்.
அஸ்வின், விராட், ரோஹித்:
அதனாலேயே அவர்களை கௌதம் கம்பீர் படிப்படியாக கழற்றி விட்டு வருவதாக தெரிவிக்கும் திவாரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “நிறைய கிரிக்கெட்டை விளையாடிய அஸ்வின், ரோஹித் போன்ற சீனியர்கள் தலைமைப் பயிற்சியாளர் அல்லது மற்றவர்களை காட்டிலும் அதிக மதிப்புடையவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் ஏதேனும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கேள்விகளை எழுப்புவார்கள்”
“எனவே அவர்கள் அணியில் இருக்கக்கூடாது என்பதை நீங்கள் உறுதி செய்வது அடிப்படையாகும். பயிற்சியாளர் பொறுப்பேற்றது முதல் நமது அணியில் நிறைய விமர்சனங்கள் எழுவதை நான் கவனித்து வருகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மையற்ற விஷயங்கள் நடக்கின்றன. கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்ததும் அஸ்வின் ஓய்வு பெற்றார். விராட், ரோஹித் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றனர்”
ரிட்டையராக கம்பீர் காரணம்:
“எதிர்பாராத வகையில் அணியில் சேர்க்கப்பட்ட (ஹர்ஷித் ராணா போன்ற) வீரர்கள் நேரடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறுகின்றனர். கம்பீர் யாருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை. விராட், ரோஹித் இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான சேவையாளர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் சென்றனர்”
இதையும் படிங்க: 100% செஞ்சா எந்த வேலையும் சிறியதல்ல.. பானிபூரி விற்க உதவிய பின்னணி பற்றி.. ஜெய்ஸ்வால் பேட்டி
“அவர்கள் தங்களுடைய நாட்டுக்காக இதயத்தைக் கொடுத்து விளையாடினார்கள். அப்படிப்பட்ட அந்த வீரர்கள் நம்முடைய இமேஜ் பாதிக்கப்பட்டு இனிமேலும் அணியில் இருக்க விரும்பவில்லை என்று நினைத்தால் ஓய்வை அறிவிப்பார்கள். அதான் அடிப்படியில் அவர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட், ரோஹித் ஆகியோருடைய ரெக்கார்ட் அற்புதமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே அவர்களை கம்பீர் மொத்தமாக கழற்றி விட மாட்டார். உலகக்கோப்பை திட்டத்தில் கம்பீர் அவர்களை வைத்திருக்காவிட்டால் அது மோசமான முடிவாகும்” என்று கூறினார்.



