
ஆஷஸ் 2025 – 26 கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடும் ஆஸ்திரேலியாவும் முதல் நாள் முடிவிலேயே 123/9 ரன்கள் எடுத்து திண்டாடியது.
அந்த வகையில் முதல் நாளிலேயே பெர்த் மைதானத்தில் கொத்தாக 19 விக்கெட்டுகள் விழுந்தது. அதனால் கடந்த 100 வருடங்களில் நடைபெற்ற ஆஷஸ் போட்டிகளில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகள் விழுந்த போட்டியாக இப்போட்டி மோசமான சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு பெர்த் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கொல்கத்தாவில் இந்தியா – தென்னாபிரிக்க அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்தது. அதற்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. அது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் இருப்பதாக மைக்கேல் வாகன் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.
ஆனால் தற்போது பெர்த் பிட்ச் ஒருதலைபட்சமாக இருப்பதைப் பற்றி வெளிநாடுகளைச் சேர்ந்த யாருமே அதிகமாக விமர்சித்து பேசவில்லை. அதனால் இந்தியா என்றால் தகரம், வெளிநாடுகள் என்றால் தங்கமா? என்று இந்திய ரசிகர்கள் மைக்கேல் வாகன் போன்றவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கொல்கத்தா, பெர்த் ஆகிய மைதானங்களின் பிட்ச்கள் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்ததை அனைவரும் அறிவோம்.
அதற்காக அதில் பேட்டிங் செய்யவே முடியாது என்றில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த பிட்ச்களில் தெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர், ஹாரி ப்ரூக், ஓலி போப் ஆகியோர் நங்கூரமாக விளையாடி கணிசமான ரன்கள் அடித்தனர். ஆனால் பெரும்பாலான பேட்ஸ்மேன்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார்கிட்டயும் அடி வாங்காத ஜஸ்ப்ரித் பும்ராவையா.. அசால்ட்டா நான் 150இல் அடிச்சேன்? பாக் வீரர் கிண்டல்
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளையும் பந்துகளையும் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் காணாமல் போயுள்ளதாகவும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிகளில் விளையாடக்கூடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் எங்கே சென்றனர்? இந்தியா சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் 124 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது. தற்போது ஆஷஸ் தொடரின் ஓப்பனிங் நாளில் வேகத்துக்கு சாதகமான பெர்த் பிட்ச்சில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர்” என்று கூறியுள்ளார். இதற்கு டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.