இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்த ஒரே பந்து வீச்சாளராகவும் பும்ரா உலக சாதனை படைத்துள்ளார்.
அதே போல டி20 கிரிக்கெட்டில் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற பும்ரா இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனும் சிக்ஸர்களை அடித்ததில்லை.
ஜஸ்ப்ரித் பும்ராவை கலாய்த்த:
ஆனால் 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் லீக் போட்டியில் அவருக்கு எதிராக சில சிக்ஸர்களை அடித்தார். அதன் வாயிலாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அத்துடன் பும்ராவுக்கு எதிராக மொத்தமாக அவர் 34 பந்துகளில் 51 ரன்களை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார்.
தற்போது அதையே காரணமாக வைத்து அவர் பும்ராவை கிண்டலடிக்கும் வகையில் பேசியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக சிக்சர்கள் அடித்த அனுபவம் பற்றி தெரிவிக்குமாறு தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்:
“அந்த பவுலர் எப்போதும் சிக்ஸராக அடி வாங்கியதில்லையா? அது எப்படி சாத்தியமாக முடியும்? என்று நான் நினைத்தேன். ஆனால் 3 இன்னிங்ஸில் அவருக்கு எதிராக தனியாளாக 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளேன். அந்த வகையில் நாங்கள் விளையாடும் போது, யார் பவுலிங் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: சூப்பர் ஓவரில் சூர்யவன்சி, ஆர்யாவை களமிறக்காமல் இந்தியா தோற்றது ஏன்? கேப்டன் ஜிதேஷ் பேட்டி
அதாவது இதற்கு முன் யாரிடமும் அடி வாங்காத பும்ராவையா நான் சிக்ஸராக அடித்தேன்? என்று கலாய்த்துள்ள அவர் தம்மைப் பற்றி பெருமை பாடியுள்ளார். அத்துடன் பும்ராவை நம்பர் ஒன் பவுலர் என்றெல்லாம் பார்க்காமல் சிக்ஸர்கள் அடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தற்பெருமையைத் தவிர்த்து 2025 ஆசியக் கோப்பையில் பர்ஹான் 217 ரன்களை 108.49 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து மோசமாக விளையாடினார். அது இந்திய அணியிடம் பாகிஸ்தான் ஹாட்ரிக் தோல்வியை சந்திக்க ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



