CWC 2023 : உ.கோ நடத்த ஆசைப்பட்டா மட்டும் போதாது.. பிசிசிஐ, இந்திய ரசிகர்களை விமர்சித்த முகமது ஹபீஸ்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 1987, 1996, 2011 போன்ற வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த துவங்கியுள்ளன.

இருப்பினும் இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே நிறைய குளறுபடிகளும் அரங்கேறி வருவது சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக எடுத்த எடுப்பிலேயே மாநில வாரியங்களுடன் ஆலோசிக்காமல் பிசிசிஐ தயாரித்த அட்டவணையில் 2வது முறையாக ஐசிசி மாற்றம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. அத்துடன் டிக்கெட்களை வாங்குவதற்காக ரசிகர்கள் ஆன்லைனில் படாதபாடு பட்டதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

ஹபீஸ் விமர்சனம்:
மேலும் துவக்க விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி துவங்கும் போது ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் 10000 ரசிகர்கள் கூட இல்லாததை பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்தனர். அது போக தரம்சலா மைதானத்தில் களப்பகுதிகளில் தேவையான புற்கள் இல்லாதது வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையை ஆசையுடன் நடத்தினால் மட்டும் போதாது அதற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவை பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்கள் சரியாக செய்து கொடுத்திருக்க வேண்டும் என்று முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை மொத்தமாக இந்த உலகக் கோப்பையில் நாம் 4 நாட்களை மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் அதற்குள் மோசமான அமைப்பு, ஒழுங்குமைப்பாளர்களின் மோசமான திட்டமிடல் ஆகியவற்றை தான் பார்க்க முடிகிறது”

- Advertisement -

“அதை விட அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் வராதது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பொதுவாக நீங்கள் ஒரு உலகளாவிய தொடரை நடத்தும் போது அதற்கான முடிவுகளை எடுக்க உங்கள் மனதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். மாறாக சிறிய நோக்கத்துடன் பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. அதே போல யாரும் பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் தரம்சாலா மைதானத்தின் களம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது”

இதையும் படிங்க: NZ vs NED : இது என்னுடைய பெஸ்ட்டே கிடையாது.. ஆனாலும்.. – ஆட்டநாயகன் மிட்சல் சான்ட்னர் பேட்டி

“அது வீரர்களுக்கு பாதுகாப்பாக இல்லை. மேலும் பாகிஸ்தானியர்கள் என்பதையும் தாண்டி ஒவ்வொரு அணி ரசிகர்களுக்கு தேவையான விசா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நீங்கள் இந்த உலகக் கோப்பையை சரியாக கையாளவில்லை என்றால் இது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று” கூறினார்.

Advertisement