
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 1987, 1996, 2011 போன்ற வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் பல அம்சங்கள் குளறுபடிகளாக இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே பெரும்பாலான மைதானங்கள் ரசிகர்கள் இல்லாமல் பெரும்பாலான போட்டிகள் வெறிச்சோடி நடைபெற்று வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்திருந்தார். அத்துடன் தரம்சாலாவில் வீரர்கள் காயத்தை சந்திக்கும் அளவுக்கு வெளிப்புற களத்தில் புற்கள் இல்லாமல் சுமாரான மைதானம் இருப்பதாகவும் அவர் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை நடத்துவது ஐசிசியா அல்லது பிசிசிஐயா என்று அவர் மீண்டும் சர்ச்சையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
நடத்துவது யார்:
அதாவது இத்தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் போட்டி சுழலுக்கு சாதகமாக இருந்ததை அனைவரும் அறிவோம். சொல்லப்போனால் போட்டி துவங்குவதற்கு முன்பாக காண்பிக்கப்பட்ட ரிப்போர்ட்டில் பிட்ச் நன்றாக காய்ந்து வெடித்திருந்ததால் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று வர்ணனையாளர்கள் சொன்னது போலவே இறுதியில் நடந்தது.
அந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக வழுவழுப்பாக இருந்தது. அந்த வகையில் தங்களுக்கேற்றார் போல் சுழலுக்கு சாதகமான மைதானங்களை இந்தியா அமைத்து வருவதாக விமர்சிக்கும் ஹஃபீஸ் இதை நாளை கண்டுபிடிக்கிறேன் என்று அக்டோபர் 13ஆம் தேதி ட்விட்டரில் புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு கூறியுள்ளது பின்வருமாறு. “முதலில் நாளை இத்தொடரை ஐசிசி அல்லது பிசிசிஐ ஆகியோரில் யார் நடத்துகிறார் என்ற முடிவு தெரிய வரும்”
“ஏனெனில் இதுவரை இத்தொடர் ஹைதராபாத், டெல்லி மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அங்கே நடந்த 2 போட்டிகளிலும் ஒரே மாதிரியான பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் இருந்தன. அதே போல சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் இருந்த அதே பிட்ச் சூழ்நிலைகள் மீண்டும் இருந்தால் அதை புரிந்து கொள்ளலாம்”
இதையும் படிங்க: பிட்ச்லாம் நல்லா தான் இருந்துச்சி. ஆனாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – நஜ்முல் ஷாண்டோ வருத்தம்
“ஆனால் சற்று மாற்றம் இருந்தால் பின்னர் யார் தொடரை நடத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஐசிசி நடத்தும் இத்தொடரில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. அதில் விதிமுறைகளை பின்பற்றி மைதான பராமரிப்பாளர்கள் மட்டுமே நடத்த வேண்டும். எனவே நாளை நடைபெறும் போட்டியில் அங்கே பேட்டிங்க்கு சாதகமான பிட்ச் இருந்தால் பெரிய கேள்வி எழும் என்பதே என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.