சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் 82 ஐயர் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இலங்கை சார்பில் மதுசங்கா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் அனல் தெறித்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்து வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தனித்துவ சாதனை:
அதனால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது வென்றதுடன் நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார்.
முன்னதாக 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹார்ட்ரிக் உட்பட 4/40 விக்கெட்டுகளை எடுத்திருந்த ஷமி அதற்கடுத்து நடைபெற்ற 2 போட்டிகளில் முறையே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 4/12, இங்கிலாந்துக்கு எதிராக 5/19 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதாவது அந்த உலகக் கோப்பையில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் ஷமி 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
அந்த சூழ்நிலையில் இந்த உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் 5/54 விக்கெட்டுகளை எடுத்து அதன் பின் இங்கிலாந்துக்கு எதிராக 4/22 விக்கெட்களை சாய்த்து இப்போட்டியில் 5/18 விக்கெட்களை எடுத்துள்ளார். அதாவது கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஷமி எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன் கபில் தேவ், ஜாஹீர் கான் உள்ளிட்ட வேறு எந்த இந்திய பவுலர்களும் இப்படி ஒரு சாதனை படைத்ததில்லை. உலக அரங்கில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 1990இல் 2 முறை 1994இல் ஒருமுறை என மொத்தம் 3 முறை தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனையை உச்சகட்டமாக படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இவ்ளோ ரன் அடிச்சா போதும்.. யார வேணா தோக்கடிக்கலாம்.. – இலங்கை அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு ரோஹித் பேட்டி
அத்துடன் 3 உலகக் கோப்பைகளில் (2015, 2019, 2023) குறைந்தது 10 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையும் ஷமி படைத்துள்ளார். இது போக உலகக் கோப்பையில் அதிக முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற மிட்சேல் ஸ்டார்க் (இருவரும் தலா 3 முறை) சாதனையையும் ஷமி சமன் செய்துள்ளார்.