100 ரூபாய்க்கே வழியில்ல.. கிரிக்கெட்டை விட்ரலாம்ன்னு நெனச்சேன்.. அதை செஞ்சா கண்டிப்பா சாதிக்க முடியும்.. சிராஜ் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் மார்ச் 13ஆம் தேதி தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுபவரின் மகனாகப் பிறந்து உள்ளூரில் விளையாடிய அவர் பின்னர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடினார். அதில் ரன்களை வாரி வழங்கி தோல்விகளுக்கு காரணமாக அமைந்ததால் உங்கள் அப்பாவைப் போல் ஆட்டோ ஓட்டச் செல்லுங்கள் என்ற விமர்சனங்களை சிராஜ் சந்தித்தார்.

இருப்பினும் அப்போதைய பெங்களூரு கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் தொடர்ந்து போராடிய அவர் 2019 – 2020 சீசன்களில் நன்றாக விளையாடினார். அதைத் தொடர்ந்து இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட துவங்கிய அவர் 2020இல் தன்னுடைய தந்தை இறப்புக்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றியில் பங்காற்றியதை மறக்க முடியாது.

- Advertisement -

பகிர்ந்த சிராஜ்:
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி தற்போது இந்திய அணியின் முதன்மை பவுலர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக கடந்த வருடம் ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கை 50 ரன்களுக்கும் உலகக் கோப்பையில் 55 ரன்களுக்கும் ஆல் அவுட்டாக முக்கிய காரணமாக இருந்த அவர் தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் 2019 – 2020 காலங்களில் 100 – 200 ரூபாய்கள் பணம் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்தித்ததால் கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நினைத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார். தன்னுடைய 30வது பிறந்தநாளில் ஆரம்பக் காலங்களில் சந்தித்த கடினமான தருணங்கள் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “2019 – 2020 காலங்களில் இதுவே கடைசி வருடம். இனிமேல் நல்லதுக்காக கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்”

- Advertisement -

“அந்த சமயத்தில் நான் சமையல் வேலைக்காக செல்வேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் படிக்குமாறு சொல்வார்கள். வாடகை வீட்டில் நாங்கள் இருந்தாலும் எனக்கு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் இருந்தது. எங்கள் வீட்டில் அப்பா மட்டுமே பணம் சம்பாதிப்பவராக இருந்தார். எனவே 100 – 200 ரூபாய் எனக்கு கிடைத்தால் கூட அதை வைத்து நான் மகிழ்ச்சியடைவேன். அதில் 100 – 150 ரூபாய்களை வீட்டில் கொடுத்து விட்டு 50 ரூபாய்களை நான் வைத்துக்கொள்வேன்”

இதையும் படிங்க: விராட் கோலி இல்லனா சொந்த மண்ணுலயே தோத்துருப்பிங்க.. இந்திய தேர்வுக் குழுவை எச்சரித்த பாக் வீரர்

“அப்படி நியாயமான போராட்டங்களுக்கு பின்னரே நான் இங்கே வந்துள்ளேன். அந்த வகையில் நீங்கள் கடினமாக உழைக்கும் போது அது கண்டிப்பாக வீண் போகாது. இன்று அல்லது நாளை அல்லது சில வருடங்கள் கடந்தாலும் உங்களுடைய கடினமான உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் ஒருநாள் கிடைக்கும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு அணியில் சிராஜ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement