இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதல் பேட்டிங் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்து வீசிய ரவிந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களையும், அஷ்வின் மூன்று விக்கெட்களையும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிடம் இருந்து எதையோ பெற்றுக் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது விரல்களில் தேய்ப்பது போல சில வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.
மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலரும், கிரிக்கெட் விமர்சகர்களும் ஜடேஜா ஏதோ சர்ச்சையான விடயத்தை செய்வதாக அந்த வீடியோவை பகிர்ந்து சில கருத்துக்களையும் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஜடேஜா சிராஜிடம் இருந்து வாங்கியது ஒரு வலி நிவாரணி ஆயின்மென்ட் மட்டும் தான். அதனை விரல்களுக்கு அவர் வலிக்காகவே தடவினார் என்றும் இதில் வேறு எந்த விடயமும் கிடையாது என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் சாதிச்சா உங்களுக்கு பொறுக்காதே? சஞ்சய் மஞ்ரேக்கரை தாக்கிய முரளி விஜய் – நடந்தது என்ன
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்தாலும் இப்படி வலி நிவாரணியை கையில் தடவுவது ஐசிசியால் அனுமதிக்க கூடிய ஒன்றுதான் என்றும் அதனாலேயே போட்டி நடுவர்கள் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.