எல்லாரும் சொல்ற மாதிரி பிட்ச் காரணம் இல்ல.. 2023 உ.கோ தோல்வி பற்றி ஷமி பேட்டி

Mohammed Shami
- Advertisement -

இந்தியாவில் ஐசிசி நடத்திய 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா 6வது முறையாக தட்டிச் சென்றது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்ததால் கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகமாக அமைந்தது.

- Advertisement -

பிட்ச் காரணம் இல்லை:
முன்னதாக இறுதி போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானம் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மிகவும் சவாலாக இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். அது போக இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்தது கடைசியில் அவர்களுக்கே தோல்வியை கொடுத்ததாக ரிக்கி பாண்டிங், பிரெட் லீ போன்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு பிட்ச் காரணம் இல்லை என்று தெரிவிக்கும் முகமது ஷமி ஃபைனலில் அதிர்ஷ்டம் இல்லாமல் போனதாலேயே வெற்றி நழுவியதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாட்டுக்காக விளையாடும் போது அனைவருமே அழுத்தத்தை சந்திப்பார்கள். ஏனெனில் உங்களுக்கு அங்கே பொறுப்பு இருக்கும். அனைவரும் அழுத்தத்துடன் விளையாடுவார்கள் என்பதால் நீங்கள் திட்டமிட்டு அதை செயல்படுத்த வேண்டும்”

- Advertisement -

“இருப்பினும் எங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை நாங்கள் வெளியில் காட்ட மாட்டோம். ஆம் சில நேரங்களில் வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் போவது போன்ற அம்சங்களும் தோல்வியை கொடுக்கும். நிறைய பேர் நாங்கள் தவறான பிட்ச்சை தேர்ந்தெடுத்ததே தோல்வியை கொடுத்ததாக சொன்னார்கள். மற்றும் சிலர் நாங்கள் கூடுதல் ரன்கள் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். விளையாட்டை பார்க்கும் பலரும் இப்படி சொல்வார்கள்”

இதையும் படிங்க: சிட்னி – வெஸ்ட் மாம்பழத்துல மீட்டிங் வெச்சுக்கலாம்.. நேதன் அழைப்பை ஏற்ற அஸ்வின்.. நெகிழ்ச்சி பதிவு

“ஆனால் களத்தில் விளையாடும் நாங்கள் தான் அனைத்தையும் சமாளிக்கிறோம். உலகக்கோப்பையின் முதல் நாளிலிருந்தே வெற்றியிலும் தோல்வியிலும் நாம் அணியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். அதனால் ஃபைனல் சென்ற போது ஒன்றாக அதை சாதித்தோம் என்ற உணர்வை நாங்கள் கொண்டிருந்தோம். யாரையும் குறை சொல்லவில்லை. ஃபைனலில் எங்களுடைய சிறந்தவற்றை கொடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அன்றைய நாளை நீங்கள் மோசம் என்று அழைக்கலாம். ஏனெனில் அன்றைய நாளில் எங்கள் பக்கம் அதிர்ஷ்டமில்லை” என்று கூறினார்.

Advertisement