கடந்த நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 113 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 117 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதோடு சேர்த்து சச்சினின் சாதனையை கடந்து 50-வது ஒருநாள் சதத்தையும் பதிவு செய்து வரலாறு படைத்தார்.
இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கருடன் ஏற்கனவே சமநிலையில் இருந்த விராத் கோலி மும்பை வான்கடே மைதானத்தில் அதாவது சச்சினின் சொந்த மைதானத்தில் வைத்தே அவரது சாதனையை முறியடித்தார். அந்த போட்டியின் போது விராட் கோலி சதம் அடித்ததை மைதானத்தில் இருந்து சச்சினும் மகிழ்ச்சியுடன் ரசித்தார்.
அதோடு போட்டியிடையே விராட் கோலியை சச்சின் மனதார பாராட்டியும் இருந்தார். இந்நிலையில் 50-ஆவது சதம் அடித்த பிறகு சச்சினை நோக்கி விராட் கோலி செய்த சில செயல்கள் சச்சின் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் விதமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
விராட் கோலி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணி கைப்பற்றிய போது சச்சின் டெண்டுல்கரை தோலில் வைத்து சுமந்தார். ஏனெனில் 21 ஆண்டுகள் இந்திய அணிக்காக பேட்டிங்கில் தூணாக இருந்து தனது தோளில் அணியை தாங்கி வந்த சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரை தோலில் தாங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அவரது சொந்த மண்ணில் சச்சினின் முன்னிலையில் விராட் கோலி அவரது சாதனையை முறியடித்த பின்னர் சச்சின் டெண்டுல்கரை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கினார்.
இதையும் படிங்க : அஹமதாபாத்தில் நாளைக்கு நீங்க அதை கேட்கவே முடியாது.. அது தான் எங்களோட திருப்தி.. ஃபைனலுக்கு முன் கமின்ஸ் பேட்டி
பின்னர் கீழே மண்டியிட்டு தலைவணங்கி அமர்ந்தபடி அவருக்கு மரியாதை செலுத்தினார். எப்பொழுதுமே தனது ஹீரோவாக சச்சின் டெண்டுல்கரை பார்க்கும் விராட் கோலி அவர் மீது அளவற்ற மரியாதை வைத்துள்ளார். அந்த மரியாதை நிமித்தம் காரணமாகவே அவர் தலைவணங்கியபடி சச்சினுக்கு நன்றி தெரிவித்ததாக முகமது கைப் விராட் கோலியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.