
2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 15 வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது. இந்த தொடரில் 4 முறை கோப்பையை கைப்பற்றியது மட்டுமின்றி நடப்பு சாம்பியனாகவும் திகழ்ந்துவரும் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சி.எஸ்.கே அணியின் இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டாலும் கேப்டன் பதவியில் இருந்து தோனி ஆரம்பத்தில் விலகியது ஒரு பெரிய காரணியாக பார்க்கப்படுகிறது. ஜடேஜாவின் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் 8 ஆட்டங்களில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே கண்டது.
அதன் பின்னர் தற்போது மீண்டும் தோனி தலைமையில் சென்னை அணி மூன்றில் இரண்டு போட்டிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் சென்னை அணியின் சரிவு குறித்த பல்வேறு கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் சென்னை அணி செய்த ஒரு தவறை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணி இந்த சீசனில் செய்த தவறு நிலையற்ற பிளேயிங் லெவனை தேர்வு செய்தது மற்றும் தவறான கேப்டன்சி தான் இந்த சரிவிற்கு காரணம்.
இந்த தொடருக்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது பெரிய தவறு. பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற்றிருந்தாலும் கேப்டனாக ஆரம்பத்திலிருந்து இருந்திருந்தால் சென்னை அணிக்கு இந்த நிலைமை வந்திருக்காது. ஜடேஜா கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை என்று தெரிந்தும் அவருக்கு அந்த பதவியை வழங்கியது மிகப்பெரிய தவறு.
டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை கேப்டன் என்பவர் மிகவும் முக்கியம். ஆட்டத்தை கணித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் ஜடேஜா கேப்டன்சி செய்த அனுபவமே கிடையாது. ஆனால் அவரை கேப்டனாக மாற்றியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த ஆண்டு தோனி கேப்டனாக ஆரம்பத்திலிருந்து இருந்திருந்தால் நிச்சயம் சென்னை அணி சரியான பலத்துடன் இருந்திருக்கும். அதோடு தற்போது சென்னை அணிக்கு இந்த நிலைமையும் ஏற்பட்டு இருக்காது.
இதையும் படிங்க : ஹேப்பி பர்த்டே அதிரடி பொல்லார்ட் ! அலறவிடும் அம்பயர்களுக்கே டஃப் கொடுத்த 3 தருணங்கள்
எனவே தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது தான் சென்னை அணி செய்த மிகப்பெரிய தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோன்று சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர்களுக்கு இடையேயான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரசிகர்கள் பெரும் திரளாக இந்த போட்டியை காண வருவார்கள் எனவும் கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.