
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் தங்களது போட்டிகளை இந்தியாவுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தினர். அதற்கு எதிர்ப்பாக இந்தியாவில் விளையாடும் ஐபிஎல் தொடரில் வங்கதேசத்தின் முஸ்தஃபீசுர் ரஹ்மான் விளையாடக்கூடாது என்று சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ மற்றும் கொல்கத்தா நிர்வாகம் 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்தார்கள். அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது. மேலும் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்தது.
இருப்பினும் அதில் சிக்கல் இருப்பதால் ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது புள்ளிகளை எதிரணிகளிடம் இழக்கத் தயாராகுங்கள் என்று வங்கதேசத்திற்கு ஐசிசி பதிலளித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியை நடத்துவதே இந்தியா தான் என்பதை தெரிந்தும் யாரும் எதிர்த்து பேசுவதில்லை என்று இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கதேசத்துக்கு சாதகமாக அவர் பேசியது பின்வருமாறு.
“ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டு ஆபத்தில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் முஸ்தஃபீசுர் ரஹ்மானுக்கு நடந்தது நேர்மையாக சரியானதல்ல. இப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்ய ஏதேனும் செய்யப்பட வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு (அரசியல் ரீதியாக) பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அது இப்படியே செல்லக்கூடாது. அது பெரிய பிரச்சனைகளாகும்”
“அனைத்தையும் தாண்டி நான் ரஹ்மானுக்காக வருத்தப்படுகிறேன். மிகவும் நீண்ட காலம் திறமையுடன் போராடிய அவருக்கு இறுதியாக ஐபிஎல் தொடரில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. வேறு ஏதேனும் அணிக்காக அவர் வாங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கொல்கத்தா அவரை வாங்கியது. கடைசியில் நடந்த விஷயங்களால் அனைவரையும் விட அவர் தான் அதிக பாதிப்பை சந்தித்திருப்பார். இந்தியாவுக்கு விளையாட செல்லாத வங்கதேசம் ஐபிஎல் ஒளிபரப்பை தடை செய்துள்ளது என்ற செய்தியை இன்று தான் படித்தேன்”
இதையும் படிங்க: இந்தியாவிடம் தோல்வி.. ஆஷஸ் கோப்பையும் போச்சு.. இதோட இங்கிலாந்து அதை நிறுத்திக்கனும்.. மைக்கேல் வாகன்
“இங்கே வங்கதேசத்தை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை யார் செய்தாலும் அது குப்பையானது. ஏனெனில் விளையாட்டு என்பது வித்தியாசமானது. ஐசிசியும் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதே உண்மையாகும். ஆனாலும் யாரும் அவர்களை எதிர்த்து பேசவில்லை. ஐசிசியை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்றவர்களும் எதுவும் சொல்வதில்லை” என்று கூறினார்.