ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் சென்றது. மறுபுறம் பஸ்பால் ஸ்டைலில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து மீண்டும் தலைகுனியும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் 2024இல் இந்தியாவில் 4 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இங்கிலாந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் மண்ணைக் கவ்வியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை இங்கிலாந்து இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையேல் இங்கிலாந்து அணியால் வெற்றி பெறவே முடியாது என்று அவர் சாடியுள்ளார்.
பஸ்பால் போதும்:
இது பற்றி வாகன் பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கில் இங்கிலாந்து விளையாடும் அதிகப்படியான ரிஸ்க் நிறைந்த பஸ்பால் அணுகுமுறை வேலை செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் எந்த பெரிய தொடரையும் வெல்லவில்லை. அவர்கள் இந்தியாவில் தோற்கடிக்கப்பட்டார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் மற்றொரு ஆஷஸ் தொடரில் தோற்கடிக்கப்பட்டுள்ள அவர்கள் ஒருமுறை கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியதில்லை”
“எனவே உங்களுடைய தோல்வி ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதனால் அணியின் தலைமை மற்றும் இங்கிலாந்து வாரியத்தில் விஷயங்கள் மாற வேண்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பந்திற்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தனைக்கும் இங்கிலாந்திடம் ஸ்கோர் செய்யக்கூடிய இயற்கையான திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்”
வாகன் விமர்சனம்:
“ஆனால் அவர்களுடைய அதிக ரிஸ்க் எடுத்து விளையாடும் முறை வேலை செய்யவில்லை. உயர்தரத்தில் தேவைப்படும் விஷயங்களில் அவர்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணிகள் அனைவரும் விவரங்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியோ மிகவும் தளர்வான ஒரு முகாமை போல் தெரிகிறது”
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – சுப்மன் கில் வருகிறாரா?
“இந்த தோல்விக்குப் பின் அனைவரும் உட்கார்ந்து மாற்றத்தை பற்றி பேச வேண்டும். அனைவரும் மாற வேண்டியதில்லை. மாற்றத்தை முதலில் தலைமையில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டில் பிடிவாதம் என்பது அற்புதமானது. ஆனால் எல்லா நேரங்களிலும் நீங்கள் அதை பின்பற்றினால் அதுவே ஆபத்தாகும். தற்சமயத்தில் ஹாரி ப்ரூக் போன்ற வீரர்களை விட ஜோ ரூட் போன்ற முறையான வீரர்களை அதிகம் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.



