இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :
அதன் காரணமாக தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட முதன்மை அணியை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் சூரியகுமார் யாதவின் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. அந்த 15 வீரர்களில் திலக் வர்மாவும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் ஜனவரி 7-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் போட்டிக்கு பின்னர் கடும் வயிற்று வலியை சந்தித்த திலக் வர்மா ஒரு சிறிய அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் காயத்தில் இருந்து குணமடைய கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆரம்பகட்ட போட்டிகளையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக திலக் வர்மாவிற்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக திலக் வர்மாவிற்கு பதிலாக சுப்மன் கில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் திலக் வர்மா டி20 போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடுகிறார்.
இதையும் படிங்க : நியூசி டி20 தொடரில் இருந்து வெளியேறிய திலக் வர்மா.. டி20 வேர்ல்டுகப்லயும் விளையாடுவதில் சிக்கல் – என்ன காரணம்?
அந்த இடத்தில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் விளையாடுவதே பொருத்தமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏனெனில் டி20 போட்டிகளை பொருத்தவரை துவக்க வீரராக அவர் சொதப்பி இருந்தாலும் மூன்றாவது இடத்தில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 869 ரன்களை 138 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கே மாற்று வீரருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.



