புதிய உலகசாதனையை முதல் நபராக செய்து கெத்து காட்டிய இந்திய கேப்டன் – குவியும் வாழ்த்துக்கள்

Mithali
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வந்தது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் அனைத்து போட்டியிலும் நியூசிலாந்து நாட்டில் உள்ள குயின்ஸ் டவுன் நகரில் இருக்கும் அழகான ஜான் டேவிஸ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது.

IND-Womens

- Advertisement -

இந்த தொடரில் முதலில் நடந்த 4 போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து வீராங்கனைகள் தங்களது சொந்த மண்ணில் இந்தியாவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றார்கள். இதன் காரணமாக முதல் 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து 4 – 0 என்ற கணக்கில் முன்கூட்டியே தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இந்தத் தொடரின் சம்பிரதாய கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நேற்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்கியது.

வைட்வாஷ் தவிர்த்த இந்தியா:
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்தத் தொடரின் முதல் 4 போட்டிகளைப் போலவே இந்திய பந்துவீச்சாளர்களை பந்தாடிய அனைத்து நியூசிலாந்து வீராங்கனைகளும் கணிசமான ரன்களை அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூஸிலாந்து 251/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை எமிலியா கெர் 66 (75) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் தீப்தி சர்மா, கைக்வாட், ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Womens

இதை தொடர்ந்து 252 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த தீப்தி சர்மா 21 ரன்களில் அவுட்டானார். இதனால் சுமாரான தொடக்கம் பெற்ற இந்தியாவிற்கு ஒயிட்வாஷ் தோல்வி உறுதி என நினைத்த வேளையில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் சரிந்த இந்தியாவை மீட்டெடுக்க போராடினார்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் மந்தனா 71 (84) ரன்களும் ஹர்மன்ப்ரீத் கௌர் 63 (66) ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்கள்.

- Advertisement -

இறுதியில் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் மற்றும் அனுபவம் வீராங்கனை மிதாலி ராஜ் 57* (66) ரன்கள் அடுத்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 46 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 4 தொடர் தோல்விகளுக்கு பின் ஒரு வழியாக வெற்றியை பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. அத்துடன் இந்த வெற்றியின் காரணமாக 5 – 0 என்ற கணக்கில் சந்திக்க இருந்த ஒயிட்வாஷ் அமானத்தையும் இந்திய அணியினர் தவித்தார்கள்.

Mithali 2

மித்தாலி ராஜ் உலகசாதனை:
இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியில் கடைசி நேரத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் மிதாலி ராஜ் 66 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து 57* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் அரை சதமடித்து 57* ரன்கள் அடித்த அவர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 முறை 50க்கும் மேற்ப்பட்ட ரன்கள் அடித்த முதல் கேப்டன் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 132 இன்னிங்ஸ்களில் இந்தியாவிற்கு கேப்டனாக விளையாடியுள்ள அவர் அதில் 50 அரை சதங்களை விளாசி இந்த உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 33 அரை சதங்களுடன் உள்ளார். இந்த இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தில் இருந்தே மிதாலிராஜ் எந்த அளவுக்கு ஒரு மிகச்சிறந்த கேப்டனாக ரன்கள் குவித்து இந்தியாவிற்கு பங்காற்றி உள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

womens

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 50+ ரன்கள் அடித்த கேப்டன்களின் பட்டியல் இதோ:
1. மித்தாலி ராஜ், இந்தியா : 50* (132 இன்னிங்ஸ்)
2. சார்லட் எட்வர்ட்ஸ், இங்கிலாந்து : 33 (107 இன்னிங்ஸ்)
3. பெலின்டா கிளார்க், ஆஸ்திரேலியா : 29 (97 இன்னிங்ஸ்)
4. சுசி பேட்ஸ், நியூஸிலாந்து : 28 (72 இன்னிங்ஸ்)
5. மெக் லென்னிங் : 23 (66 இன்னிங்ஸ்)

- Advertisement -

உலகக்கோப்பையை வென்று கொடுப்பாரா:
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ் அதன்பின் படிப்படியாக வளர்ந்து இந்தியாவின் கேப்டனாக கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறார். சுமார் 24 ஆண்டுகள் இந்தியாவிற்காக பங்காற்றி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக அரைசதங்கள் உள்ளிட்ட பல உலக சாதனைகளை படைத்துள்ளதால் “மகளிர் கிரிக்கெட்டின் டெண்டுல்கர்” என ரசிகர்களால் பாராட்டுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க : அச்சுஅசல் ஹர்டிக் பாண்டியா போலவே காட்சியளிக்கும் WWE வீரர். அவரே வெளியிட்ட பதிவு – யார் அவர்?

தற்போது 39 வயதை கடந்துவிட்ட இவர் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி நியூசிலாந்து மண்ணில் துவங்கும் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடர் தான் அவர் இந்தியாவுக்காக கடைசி முறையாக கேப்டன்ஷிப் செய்யபோகும் ஒரு உலககோப்பை என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கடைசி வாய்ப்பில் பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்காக முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று அவர் சரித்திர வெற்றியுடன் விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement