
ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இம்முறை 1992க்குப்பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அதில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு இப்போது முதலே ரசிகர்களிடம் எகிறியுள்ளது.
ஏனெனில் காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்த இந்தியா 2018/19, 2020/21 ஆகிய கடைசி 2 தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா சாதனையும் படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் ஆஸ்திரேலியாவில் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபுறம் உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியா இம்முறை எப்படியாவது இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் கூறியுள்ளார். ஆனாலும் இம்முறை தாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2025 ஜனவரி 8ஆம் தேதி அத்தொடர் நிறைவு பெறும் போது இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றிருக்கும் என்று ஸ்டார்க் சாவல் விடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது 5 போட்டிகள் நடைபெறுவதால் இது கிட்டத்தட்ட ஆஷஸ் தொடருக்கு சமமானது. சொந்த மண்ணில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். இந்தியா வலுவான அணி என்பதை நாங்கள் அறிவோம்”
“இந்த நிமிடத்தில் நாங்கள் இருவருமே உலகின் டாப் 2 அணிகளாக உள்ளோம். எனவே ரசிகர்களுக்கு சுவாரசியமான தொடர் வரவுள்ளது. வீரர்களுக்கும் அது சிறந்த தொடராக அமையும். ஜனவரி 8ஆம் தேதி அங்கே அமர்ந்திருக்கும் போது அந்தக் கோப்பை மீண்டும் எங்கள் கரையில் இருக்கும்” என்று நம்புகிறோம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: என்னோட கேரியரில் விராட் கோலியின் அந்த மாதிரி இன்னிங்ஸை பாத்ததில்லை.. ஷாஹீன் அப்ரிடி பாராட்டு
இந்த சூழ்நிலையில் இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். அதே போல 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தங்களுடைய அணி வெல்லும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நேற்று கணித்திருந்தார். எனவே அந்த கணிப்புகளை இந்தியா பொய்யாக்குமா என்பதே இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.