இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் நன்றாக எதிர்கொண்டு வரும் அவர் இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் செமி ஃபைனல் வரை விராட் கோலி சுமாராக விளையாடினார். ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா தடுமாறிய போது 76 ரன்கள் குவித்த அவர் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தன்னை சாம்பியன் என்பதையும் நிரூபித்தார்.
தரமான கிங் கோலி:
இந்நிலையில் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் தங்களுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய 82* ரன்கள் தமது கேரியரிலேயே பார்த்த சிறந்த இன்னிங்ஸ் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹீன் அப்ரிடி பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா 160 ரன்களை துரத்தியது. இருப்பினும் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த இந்தியா 31/4 எனத் தடுமாறியது.
அப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார். குறிப்பாக ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக விராட் கோலி அடித்த சிக்சர் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் வாழ்த்தியது. அந்த வகையில் வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
மகத்தான இன்னிங்ஸ்:
அது பற்றி ஷாஹீன் அப்ரிடி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மகத்தான பிளேயர். விராட் கோலி போன்ற ஒருவரால் தான் அது போன்ற இன்னிங்ஸை விளையாட முடியும். குறிப்பாக ஹாரிஸ் ரவூப் வீசிய சிறந்த பந்தை விராட் கோலி நேராக சிக்சர் அடித்தது நம்ப முடியாததாக அமைந்தது”
இதையும் படிங்க: மெகா ஏலத்திற்கு முன்னர் பாதியாக குறைய இருக்கும் ஜடேஜாவின் சம்பளம் – காரணம் என்ன தெரியுமா?
“அப்போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் அடித்தார். விராட் கோலியின் அந்த இன்னிங்ஸ் விட ஒரு சிறந்த இன்னிங்ஸை நான் என்னுடைய கேரியரில் பார்த்ததில்லை” என்று கூறினார். அப்படி எதிரணி பவுலர் பாராட்டும் அளவுக்கு அன்றைய நாளில் உயர்ந்து நின்ற விராட் கோலி கிங் என்ற தமது சிம்மாசனத்தை மீண்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது.



