டீ காக் போராட்டம் வீண், நிக்கோலஸ் பூரான் முரட்டுத்தமான சரவெடி சதம் – அமெரிக்காவில் மும்பை சாம்பியனானது எப்படி?

MLC MI
- Advertisement -

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் மேஜர் லீக் டி20 எனும் புதிய கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 14ஆம் தேதி துவங்கியது. அதில் மொத்தமாக பங்கேற்ற 6 அணிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த டெக்ஸாஸ் அணியை முதலிடம் பிடித்த சீட்டல் ஆர்க்கஸ் அணி குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்த எம்ஐ நியூயார்க் 3வது இடம் பிடித்த வாஷிங்டன் ஃபிரீடம் அணியை எலிமினேட்டரில் தோற்கடித்தது.

அதை விட ஐபிஎல் தொடரில் பரம எதிரியான சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸை குவாலிபயர் 2 போட்டியில் தோற்கடித்த மும்பை நிர்வகிக்கும் எம்ஐ ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சீட்டல் ஆர்க்கஸ் அணிக்கு நட்சத்திர தொடக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக செயல்பட்டாலும் எதிர்ப்புறம் நௌமன் அன்வர் 9, ஸ்னேகன் ஜெயசூர்யா 16, ஹென்றிச் க்ளாஸென் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அமெரிக்காவின் சாம்பியன்:
ஆனாலும் அடுத்து வந்த ராஜனேவுடன் இணைந்து மறுபுறம் தொடர்ந்து மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த குயின்டன் டீ காக் அரை சதமடித்து 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரி 4 சிக்சருடன் 87 (52) ரன்கள் குவித்து ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ராஜனே 5 பவுண்டரியுடன் 29 (16) ரன்களில் அவுட்டாக கடைசியில் ட்வயன் பிரிட்டோரியாஸ் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 (7) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் சீட்டல் ஆர்க்கஸ் 183/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், ரஷீத் கான் ஆகிய நட்சத்திரங்கள் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 184 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் 0 ரன்களில் இமாத் வாசிம் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரான் தமக்கே உரித்தான பாணியில் சரவெடியான பேட்டிங்கை துவங்கிய நிலையில் அவருடன் பெயருக்காக 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து தடுமாறிய ஜஹாங்கீர் 10 (11) ரன்களில் கேப்டன் வேன் பர்ணல் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து பட்டையை கிளப்பிய நிக்கோலஸ் பூரான் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் விரைவிலேயே அரை சதமடித்து வெளுத்து வாங்கினார். அவருடன் அடுத்ததாக வந்து கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த இளம் வீரர் தேவால்ட் பிரேவிஸ் 3வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 (18) ரன்களில் ரன் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் கட்டுக்கடகாமல் முரட்டுத்தனமாக அடித்த நிக்கோலஸ் பூரான் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று சதமடித்து ஓயாமல் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்தார்.

அதே வேகத்தில் கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 13 சிக்ஸருடன் 137* (55) ரன்களை 249.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் முரட்டுத்தனமாக அடித்த அவர் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி ஃபினிஷிங் செய்தார். அதனால் 16 ஓவரிலேயே 184/3 ரன்கள் எடுத்த எம்ஐ நியூயார்க் மேஜர் லீக் 2023 டி20 தொடரின் கோப்பையை வென்று அமெரிக்க தொடரின் முதல் சாம்பியனாக சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ அணிக்கெதிரான 3 ஆவது போட்டி தான் அவருக்கு லாஸ்ட் சேன்ஸ் – இந்திய வீரருக்கு வாசிம் ஜாபர் வார்னிங்

குறிப்பாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் நிர்வகிக்கும் எம்ஐ அமெரிக்காவிலும் கால் தடம் பதித்து தங்களுடைய வெற்றி கொடியை பறக்க விட்டுள்ளது இந்தியாவில் இருக்கும் அந்த அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement