243 ரன்ஸ்.. கேட்ச்சில் மிரட்டிய டு பிளேஸிஸ்.. ஓப்பனிங்கிலேயே ஜேஎஸ்கே அணியை துவம்சம் செய்த எம்ஐ

SA20 MI vs JSK
- Advertisement -

ஐபிஎல் போல தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 எனப்படும் 20 ஓவர் தொடர் கடந்த வருடம் துவக்கப்பட்டது. அதனுடைய 2024 சீசன் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 13ஆம் தேதி வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகிய அணிகள் மோதின. ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னை நிர்வகிக்கும் இவ்விரு அணிகள் இப்போட்டியில் மோதியது இந்தியாவில் உள்ள ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து எம்ஐ அணிக்கு துவக்க வீரர்கள் ராசி வேன் டெர் டுஷன் – ரியான் ரிக்கல்டென் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி பட்டாசாக பேட்டிங் செய்த இந்த ஜோடி ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஜேஎஸ்கே பவுலர்களை திணறடித்தது.

- Advertisement -

எம்ஐ வெற்றி:
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காமல் முரட்டுத்தனமாக அடித்த இந்த ஜோடி 15.3 ஓவரில் 200 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெறித்தனமான துவக்கத்தை கொடுத்த போது வேன் டெர் டுஷன் 9 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 104 (50) ரன்கள் விளாசி அவுட்டானர். அவரைத் தொடர்ந்து வந்த தேவாலட் ப்ரேவிஸ் 5 ரன்களில் கொடுத்த அசாத்தியமற்ற கேட்ச்சை கேப்டன் டு பிளேஸிஸ் நீண்ட தூரம் ஓடிச் சென்று ஒற்றை கையால் தாவி டைவ் அடித்து பிடித்தது மொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் 12 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய ரிக்கல்டன் 6 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதத்தை நடுவ விட்டு 98 (49) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவர்களில் கேப் டவுன் 243/5 ரன்கள் விளாசிய நிலையில் சுமாராக செயல்பட்ட ஜேஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 2 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 244 என்ற கடினமான இலக்கை துரத்திய ஜேஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 6, ரீசா ஹென்றிக்ஸ் 0, ரோஹன் ஹெர்மன் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதன் காரணமாக 29/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 11 ரன்களில் அவுட்டானர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அதிரடியாக விளையாடிய டு ஃபிளாயும் 48 (24) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க தொடரோடு ஓரங்கட்டப்பட்ட 32 வயதான இந்திய வீரர் – இனிமேல் இவருக்கு சேன்ஸ் கிடைப்பது கஷ்டம்தான்

இறுதியில் ரோமாரியா செபார்டு 34 (19) ரன்கள் எடுத்தும் 17.5 ஓவரில் ஜேஎஸ்கே அணியை 145 ரன்களுக்கு சுருட்டி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் ஓப்பனிங்கிலேயே ஜேஎஸ்கே அணியை துவம்சம் செய்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எம்ஐ அணியின் வெற்றியை எளிதாக்கியது.

Advertisement