
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இத்தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வந்த அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இம்முறை அவர்களுடைய அனுபவம் இல்லாமல் இங்கிலாந்து மண்ணில் இந்தியா தடுமாறும் என்பது பல முன்னாள் வீரர்களின் கணிப்பாக இருக்கிறது.
குறிப்பாக 2014 இங்கிலாந்து தொடரில் விராட் கோலி மொத்தமாக சொதப்பினார். ஆனால் 2018ஆம் ஆண்டு கடினமாக உழைத்து 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் இங்கிலாந்தை வெளுத்து வாங்கி அற்புதமான கம்பேக் கொடுத்து தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். எனவே அவருடைய அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்யும் என்று கேப்டன் சுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் இங்கிலாந்து மண்ணில் வெறும் 33 என்ற சுமாரான சராசரியைக் கொண்டிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே சுமாரான சராசரியைக் கொண்டுள்ள விராட் கோலியை இந்திய அணி இங்கிலாந்தில் மிஸ் செய்யாது என்றும் அவர் பேசியுள்ளார். இது பற்றி வாகன் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி ஒரு லெஜன்ட். இந்திய அணியைச் சுற்றி வெற்றிகரமான கலாச்சாரத்தை உருவாக்கியவர். எனர்ஜி, ஆக்ரோஷம் ஆகியவற்றைப் பொறுத்து அவர் கொண்டு வந்த விஷயங்கள் இப்போதும் இந்திய அணியில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் அவருடைய சராசரி வெறும் 33. அப்படி 33 என்ற சராசரியைக் கொண்டுள்ள ஒருவரை நீங்கள் அதிகமாக மிஸ் செய்ய மாட்டீர்கள்”
இதையும் படிங்க: இந்தியாவுக்காக அறிமுகமான சுதர்சன்.. நாயர் 8 வருட கம்பேக்.. அதிரடி மாற்றத்துடன் பிளேயிங் லெவனை அறிவித்த கில்
“அதே சமயம் உடைமாற்றும் அறைக்குள் நிறைய விஷயங்களைக் கொண்டு வரும் ஒருவரை நீங்கள் மிஸ் செய்வீர்கள். தற்போது இந்திய அணிக்காக விளையாட வந்துள்ள இளம் வீரர்கள் சீரியஸாக நல்ல திறமையுடையவர்கள். இந்த இளம் தலைமுறை தற்காலிகமாக காத்திருக்கலாம். ஆனால் கூடிய விரைவில் அவர்கள் சிறப்பாக விளையாடினால் அதைக் கண்டு ஆச்சரியப்படாதீர்கள்” என்று கூறினார்.