
இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியாவை 3வது போட்டியில் இங்கிலாந்து சாய்த்தது. அதனால் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முன்னதாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் 172 ரன்களை துரத்திய இந்தியா ஆரம்பம் முதலே தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் சுமாரான பேட்டிங் முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் விளையாட வேண்டிய சூரியகுமார் யாதவ் கண்மூடித்தனமான ஷாட்டை அடித்து விக்கெட்டை கொடுத்தார்.
மேலும் 0, 12, 14 என இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் 20 ரன்கள் கூட தாண்டாமல் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து. இந்நிலையில் அனைத்து பந்துகளிலும் அதிரடியாக விளையாட முடியாது என்பதை உணர்ந்து சூரியகுமார் யாதவ் விளையாட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“சூரியகுமார் இத்தொடரில் தொடர்ச்சியாக மிகவும் எளிதாக தன்னுடைய விக்கெட்டை கொடுத்துள்ளார். அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாட விரும்பினால் அதற்கு நீங்கள் சரியான பந்தை தேர்ந்தெடுப்பது அவசியம். அதே சமயம் அனைத்து பந்துகளிலும் உங்களால் பவுண்டரிகள் அடிக்க முடியாது. சூரியகுமார் போன்ற இந்த காலத்து வீரர்கள் தங்களது திறமைக்கு அனைத்தையும் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்”
“ஆனால் அது அனைத்து நேரங்களிலும் சாத்தியம் கிடையாது. இந்தியா கம் பேக் கொடுப்பதற்கு இதே போல சுமாராக விளையாடக் கூடாது. அதை நான் நினைத்தும் பார்க்கவில்லை. அவர்கள் வெற்றி பெறுவதற்கு சூரியகுமார் யாதவ் “சரி எனக்கு நானே 15 பந்துகள் நேரம் கொடுத்து மைதானத்தின் எல்லைகளை கவனித்து அதற்கு தகுந்தார் போல் விளையாடுகிறேன்” என்ற அணுகு முறையில் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஆதார் கார்ட் ட்விஸ்ட் வைத்த டெல்லி.. விராட் கோலியின் 12 வருட கம்பேக்கிற்காக கலக்கல் பிளான்
“அதை செய்தால் காற்றில் பவுண்டரிகளை பறக்க விடும் திறமை அவரிடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல சூரியகுமாரிடம் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கும் திறமை இருப்பதை ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளோம். இருப்பினும் அதற்கு அவர் கொஞ்சம் நிதானத்துடன் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடுவதும் அவசியமாகிறது.