
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே அமைந்தது.
குறிப்பாக தரமான ஆல் ரவுண்டராக அறியப்படும் ஹர்டிக் பாண்டியா காயத்தால் விளையாடவில்லை. அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் காயத்தால் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படாத அவர் அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய வீரர்களைப் போன்ற அணுகுமுறையைக் கொண்டவர் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஆஸ்திரேலியர்களை போல பாண்டியா கடினமான சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சாமல் பேட்டிங், பவுலிங் செய்யக்கூடியவர் என்று அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட திறமையான பாண்டியாவை இந்தியா இத்தொடரில் மிஸ் செய்வதாகவும் கிளார்க் தெரிவித்துள்ளார். அத்துடன் பாண்டியா போன்ற தரமான ஆல் ரவுண்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை தாம் இப்போதும் விரும்புவதாகவும் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது பற்றி கிளார்க் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு அவருடைய பவுலிங் மிகவும் முக்கியம். அது டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் உட்பட எந்தப் போட்டியாக இருந்தாலும் அவருடைய ஆட்டம் முக்கியமாக இருக்கும். முதல் ஒருநாள் போட்டியில் அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு தவற விடப்பட்டார். மிடில் ஓவர்களில் அவருடைய பவர் ஹிட்டிங் முக்கியமானது”
“அவருடைய பௌலிங் மற்றும் அணுகுமுறை ஆகியவை ஆஸ்திரேலியர்களின் அணுகுமுறையை போல் இருக்கும். எப்போதும் அவர் கிரிக்கெட்டின் அந்த பிராண்ட்டை விளையாடினார். இப்போதும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர் ஒழுக்கமான பவுலிங் ஆல் ரவுண்டர் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அவரு எங்க போவாரு பாவம்.. சர்பராஸ் கான் விடயத்தில் நிர்வாகம் செய்த தவறை சுட்டிக்காட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
மைக்கேல் கிளார்க் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்டியா அறிமுகமான காலங்களில் சதமடித்து இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகள் எடுத்து பெரிய தாக்கத்தை உண்டாக்கினார். துரதிஷ்டவசமாக 2019 உலகக் கோப்பைக்கு பின் முதுகுப் பகுதியில் பாண்டியா பெரிய காயத்தை சந்தித்தார். அதனால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் விளையாட முடியாது என்று அவர் வெளிப்படையாகவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.