இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 6 போட்டியில் விளையாடி 1 சதம் மற்றும் 3 அரைசதம் என 371 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு கடந்த பல ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் மலைபோல் ரன் குவித்திருக்கும் அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் பேசி வந்தார்கள்.
சர்பராஸ் கானுக்கு நடந்தது அநியாயம் : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனால் இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரும் சர்ப்ராஸ் கான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெறவில்லை. தனது கூடுதல் உடல் எடை தான் தேர்வுக்கு தடையாக இருக்கிறதோ என்று நினைத்த அவர் உடற்தகுதியிலும் தற்போது பன்மடங்கு மேம்பட்டு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பினை வழங்க மறுத்து வருகிறது.
இப்படி முதன்மை அணியில் தான் இடம் கிடைக்கவில்லை என்றாலும் இந்திய ஏ அணியிலாது அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காதது தற்போது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
ஏனெனில் தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணியில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சர்பராஸ் கானிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நிர்வாகத்தை சாடும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சர்ஃபராஸ் கான் தன்னை நிரூபித்துக் காட்ட இருந்த ஒரே கதவையும் தற்போது நிர்வாகத்தினர் அடைத்து விட்டனர்.
அவரை தேர்வு செய்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்பது புரியவில்லை. இந்திய ஏ அணிக்காக சுப்பிரமணியம் பத்ரிநாத் பல ஆண்டுகள் கேப்டனாக விளையாடியிருந்தார். ஆனால் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை. அதேபோன்று மனோஜ் திவாரியையும் நிர்வாகம் அதேபோன்று ஒதுக்கி இருந்தது. இந்திய ஏ அணியில் பலகாலம் பார்த்துவிட்டதால் உங்களிடம் புதிதாக பார்க்க எதுவும் இல்லை என நிர்வாகம் அவர்களுக்கு வாய்ப்பை மறுத்தது.
இதையும் படிங்க : இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிச்சயம் விராட் கோலி இதைச் செய்வார் – மைக்கல் கிளார்க் கணிப்பு
அதேபோன்று சர்பராஸ் கானையும் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய அவரை தொடர்ந்து விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கான கதவுகளை நிர்வாகத்தினர் அடைத்து விட்டனர். அவரின் நிலையை நினைக்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. இப்படி இருந்தால் அவர் எங்கு தான் செல்வார்? என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



