
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை ஜூன் 20ஆம் தேதி சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றிலும் வெற்றி நடை போடுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக லீக் சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
கடந்த காலங்களில் 3வது இடத்தில் களமிறங்கி டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த அவர் 2 தொடர்நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார். இருப்பினும் இம்முறை ஐபிஎல் 2024 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதன் காரணமாக அவரை இந்திய அணி நிர்வாகம் துவக்க வீரராக களமிறக்கியது.
மாற்றம் வேண்டாம்:
அந்த வாய்ப்பில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி பரிதாப சாதனை படைத்தார். அதனால் மீண்டும் அவர் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் விராட் கோலியிடம் மோசமான மாற்றம் ஏற்பட்டு விடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் லீக் சுற்றில் தடுமாறிய விராட் கோலி அடுத்து வரும் முக்கியமான போட்டிகளில் பெரிதாக அசத்துவதற்கு ஒரு அடி முன்னதாக இருப்பதாக கிளர்க் தெரிவித்துள்ளார். எனவே அதற்குள் மாற்றங்களை செய்து அணியை கெடுத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் பேசியது பின்ருமாறு. “இதுவே தங்களுடைய சிறந்த 11 வீரர்கள் என்று இந்தியா கருதினால் அதை தொடர வேண்டும்”
“ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான பிட்ச்சில் (அமெரிக்கா) விராட் கோலி விளையாடினார். எனவே 3 குறைந்த ஸ்கோர்கள் அடித்தது விராட் கோலியிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா அவரை துவக்க வீரராக கொண்ட இந்த அணியை தங்களின் சிறந்த 11 பேர் அணியாக கருதலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி இந்தியாவுக்காக 3வது இடத்தில் விளையாடுவார் என்ற நிறைய பேச்சுக்கள் காணப்பட்டது”
இதையும் படிங்க: அங்க தான் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கு.. இதை செய்யலன்னா இந்தியா கஷ்டப்படும்.. ஹைடன் பேட்டி
“ஆனால் கடைசியில் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய இடத்தையே இந்தியாவும் தேர்ந்தெடுத்துள்ளது. எனவே 3 குறைந்த ஸ்கோர்களால் நான் கவலைப்பட மாட்டேன். விராட் கோலி மிகப்பெரிய ஸ்கோரை நெருங்குவதற்கு ஒரு அடி மட்டுமே முன்னதாக உள்ளார் என்பதே இதற்கான அர்த்தமாகும். அது முக்கியமான நேரமாகவும் வருகிறது. பொதுவாக அங்கே தான் சிறந்த வீரர்கள் உயர்ந்து நிற்பார்கள்” என்று கூறினார்.