
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் இருக்கும் அந்தத் தொடரின் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
முன்னதாக இந்தத் தொடரில் டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் ஆகியோர் மோதிக்கொண்டது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. தற்போது களத்திற்கு வெளியே 4வது போட்டிக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா இந்தியாவை சேர்ந்த ஊடகங்களுக்கு முழுவதுமாக இந்தியில் பேட்டி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகங்கள் ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்குமாறு ஜடேஜாவிடம் கேட்டனர். அப்போது பயிற்சிக்கு செல்ல இந்திய அணியின் பேருந்து தயாராக இருப்பதால் பின்னர் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டு ஜடேஜா அங்கிருந்து கிளம்பினார். அதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் வேண்டுமென்றே தங்களை ஜடேஜா அவமானப்படுத்தியதாக வசைப்பாடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த காலங்களில் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர் கூட ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். எனவே ஜடேஜா அவ்வாறு செய்ததில் தமக்கு ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“உண்மையில் எதுவும் அதிகம் மாறியதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய அணிகள் இங்கே வந்த போதெல்லாம் நான் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன். எம்எஸ் தோனி மொத்த தொடரில் ஒரு முறை கூட முழுமையாக அவ்வாறு செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் ஊடகங்களை தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாட்டுடன் இருந்தார். நீண்ட காலத்திற்கு முன்பாகவும் இது அப்படியே இருந்தது என்று நினைக்கிறேன். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததுமே இதை தெளிவாக சொல்லி விட்டார்கள் என்றும் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இந்தியா – ஆஸி 4வது டெஸ்ட் நடைபெறும் மெல்போர்ன் மைதானம் எப்படி? புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்
“குறிப்பாக தாங்கள் தங்களுடைய திட்டங்களில் மட்டுமே நிற்க போகிறோம் என்று கௌதம் கம்பீர் முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தெளிவாக சொன்னார். எனவே இந்திய அணியினர் இவ்வாறு செய்வதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் இவ்வாறு நீங்கள் கவலைப்படுவது இந்தியாவுக்கு எதையும் செய்யப்போவதில்லை” என்று கூறினார்.