
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 587 ரன்கள் குவித்தது.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக இரட்டை சதமடித்த கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார். அவருடன் ஜெய்ஸ்வால் 87, வாஷிங்டன் சுந்தர் 42, ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடும் இங்கிலாந்து 2வது நாளில் 77/3 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் 2023 வரை 2 மற்றும் 3வது இடங்களில் விளையாடி வந்தார். அதில் 2021 காபா போட்டியில் 91 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றியில் பங்காற்றியதைத் தவிர்த்து அவர் வெளிநாடுகளில் பெரிய ரன்கள் குவித்ததில்லை. இருப்பினும் இந்திய மண்ணில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் புஜாராவுக்கு பின் 3வது இடத்தில் விளையாடி வந்தார்.
தற்போது கேப்டனாக பொறுப்பேற்ற பின் 3வது இடத்தை சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோருக்கு வழங்கிய அவர் 4வது இடத்தில் களமிறங்கியுள்ளார். அந்த 4வது இடத்தில் தான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் ரன் மெசினாக செயல்பட்டு இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினர். தற்போது அந்த இடத்தில் விளையாடும் கில் கேப்டனாக முதல் போட்டியில் சதமும் 2வது போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் கூட இரட்டை சதத்தை அடித்ததில்லை என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் பாராட்டியுள்ளார். அதை செய்துள்ள சுப்மன் கில் தான் இந்தியாவின் புதிய நம்பர் 4 பேட்ஸ்மேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் கூறியது பின்வருமாறு.
இதையும் படிங்க: பி.சி.சி.ஐ-யின் விதிமுறையை மீறி நடந்துகொண்ட ரவீந்திர ஜடேஜா.. என்ன நடந்தது? – நடவடிக்கை பாயுமா?
“சுப்மன் கில் நம்பர் 4வது இடத்தில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் மிகப்பெரிய இடங்களை நிரப்பி வருகிறார். ஆனால் அவரைப் போல சச்சின், விராட் கோலி ஆகியோர் கூட இங்கிலாந்தில் இரட்டை சதத்தை அடித்ததில்லை” என்று கூறினார். சொல்லப்போனால் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதத்தை அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.