
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் 15 போட்டியில் விளையாடி 759 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஐபிஎல் தொடர் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அவர் தமிழ்நாடு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அவரை எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
திறமை வாய்ந்த சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்தது சரிதான் என்றும் அவருக்கு பிளேயிங் லெவனில் உடனடியாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் அவருக்கு மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். அதோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் சரியான நேரத்தில் இந்திய அணிக்குள் வருவார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் சாய் சுதர்சனிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. அதுமட்டும் இன்றி அனைத்து வகையான ஷாட்டுகளை விளையாடும் அளவிற்கு அவர் திறமையான வீரராக இருக்கிறார். தற்போது மனதளவில் தயாராக இருக்கும் அவர் என்னை பொறுத்தவரை மிகவும் மனம் கவர்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
எனவே அவருக்கு இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சியம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரது திறனை வெளிக்காட்டுவார் என்று மைக்கல் கிளார்க் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பந்துவீச்சு யூனிட்டை பொறுத்தவரை இந்த இங்கிலாந்து தொடரில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் வேணாம்.. சாய் சுதர்சன் ஓப்பனரா ஆடட்டும்.. காரணத்துடன் விவரித்த – ரிக்கி பாண்டிங்
ஏனெனில் அவர் விக்கெட் எடுக்கக்கூடிய ஒரு எக்ஸ்பேக்டர் பவுலராக இருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடரை பொறுத்தவரை அவருடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று தான் கருதுவதாக மைக்கல் கிளார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.