
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 84 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42* ரன்கள் அடித்து 48.1 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைக்க உதவினார். அதனால் இந்தத் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணியை நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. மேலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாகவும் இந்தியா தகுதிப் பெற்று சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்கு 84 ரன்கள் அடித்து நங்கூரமாக விளையாடி முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் விராட் கோலி தான் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஆல் டைம் மகத்தான பேட்ஸ்மேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். மேலும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் அனைத்து வகையான ஷாட்டுகளும் அவரிடம் இருப்பதாக கிளார்க் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் விராட் கோலி சூழ்நிலைகளை மதிப்பிட்டு விளையாடினார். கிளாஸ் வீரரான அவருக்கு தன்னுடைய அணிக்கு என்னத் தேவை, நமது அணியை எப்படி வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது சரியாகத் தெரிகிறது. அதை பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த சதத்திலும் நாம் பார்த்தோம்”
“விராட் தன்னுடைய புத்தகத்தில் அனைத்து ஷாட்டுகளையும் கொண்டுள்ளார். பவுண்டரிகளை அடிப்பதற்கான வழியைக் கண்டறியும் திறன் அவரிடம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. எனதுப் பார்வையில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான ஆல் டைம் பேட்ஸ்மேன். அதை இது போன்ற மிகவும் அழுத்தம் நிறைந்த பெரியப் போட்டிகளில் அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்”
இதையும் படிங்க: 6 ரன்ஸ் தான்.. நான் சொன்னதை செஞ்சுருந்தா சதமடிச்சுருக்கலாம்.. கோலி மிஸ் பண்ணிட்டாரு.. ராகுல் பேட்டி
“இது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அணிக்கு தேவைப்படும் நேரத்தில் அவரால் அசத்த முடிகிறது” என்று கூறினார். முன்னதாக இந்தப் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளையும் விராட் கோலி படைத்தது குறிப்பிடத்தக்கது.