
ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் யாருமே எதிர்பாராத வகையில் முதல் 8 போட்டிகளில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் வலுவாக கடைசி இடத்தை பிடித்தது. இஷான் கிசான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய போதிலும் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் திண்டாடிய அந்த அணி வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த முதல் அணி என்ற பரிதாப சாதனை படைத்தது.
அதனால் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறுவது உறுதியான நிலையில் ஒருவழியாக ராஜஸ்தானுக்கு எதிரான தனது 9-வது போட்டியில் வெற்றியை பதிவு செய்த மும்பை மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இருப்பினும் கூட இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன என்பது போல் அந்த அணி ரசிகர்கள் அடுத்த வருட ஐபிஎல் தொடரை தற்போதே எதிர்நோக்கியுள்ளனர்.
குமார் கார்த்திகேயா:
ராஜஸ்தானுக்கு எதிராக கிடைத்த அந்த போட்டியில் மோசமாக கருதப்பட்ட மும்பை பவுலர்கள் ஒருவழியாக மிகச் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக அறிமுகமாக வாய்ப்பு பெற்ற இளம் சுழல் பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா மிகவும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். அதிலும் வெறும் 4.75 என்ற கச்சிதமான எக்கனாமியில் பந்துவீசிய அவர் அன்றைய நாளில் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களை காட்டிலும் துல்லியமாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இத்தனைக்கும் இந்த வருட ஐபிஎல் தொடரில் நேரடியாக மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படாத அவர் மற்றொரு வீரர் அர்ஷத் கான் காயமடைந்த காரணத்தால் அவருக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிடைத்த எதிர்பாராத பொன்னான வாய்ப்பை அவர் அற்புதமாக பயன்படுத்தி அசத்தியுள்ளார். வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நகரில் பிறந்தவர் என்றாலும் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் மத்தியபிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
9 வருட வைராக்கியம்:
ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் தாண்டி கிரிக்கெட் மீது இருக்கும் ஆர்வத்தால் அதில் ஏதாவது சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறிவிட்டு 9 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறும் குமார் கார்த்திகேயா இதுவரை வீட்டிற்கு செல்லவில்லை என்று நெஞ்சைத் தொடும் பின்னணியை பகிர்ந்துள்ளார். இதுபற்றி முதல் போட்டியில் அசத்திய பின்பு அவர் பேசியது பின்வருமாறு. “நான் கடந்த 9 வருடங்களாக வீட்டிற்கு போகவில்லை. கிரிக்கெட்டின் வாயிலாக வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் மட்டுமே வீட்டிற்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். இருப்பினும் எனது தந்தையும் அன்னையும் அடிக்கடி அழைத்தார்கள். ஆனால் நான் அந்த முடிவில் பின்வாங்கவில்லை. தற்போது ஒருவழியாக ஐபிஎல் முடிந்ததும் வீடு திரும்ப உள்ளேன்” என்று கூறினார்.
அதாவது கடந்த 9 வருடங்களாக பெருமையாக கூறுமளவுக்கு ஏதேனும் சாதித்துவிட்டு தான் வீடு திரும்ப வேண்டும் என முடிவெடுத்திருந்த அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரில் அதுவும் மும்பை போன்ற வெற்றிகரமான ஒரு ஐபிஎல் அணியின் வெற்றிக்கு பங்காற்றியது தம்மை பொறுத்தவரை ஒரு சாதனையாக பார்ப்பதாக குமார் கார்த்திகேயா கருதுகிறார். அதன் காரணமாக 9 வருடங்களுக்கு பின் இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் வீடு திரும்ப உள்ளதாக அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி:
“நான் மிகச்சிறந்த பவுலர் என்பதால் எனக்குநானே நல்லபடியாக உணருகிறேன். முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதை நினைத்து சற்று பதற்றமாக இருந்தேன். இருப்பினும் அதன்பின் ஒவ்வொரு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் எப்படி பந்து வீச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். குறிப்பாக சஞ்சு சாம்சனின் கால் பகுதிகளில் தொடர்ச்சியாக வீச முயற்சித்தேன்.
இதையும் படிங்க : வாஷிங்க்டன் சுந்தருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? – பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அதேபோல் சச்சின் சார் அவர்களின் ஆலோசனைகள் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கொடுத்தன” என்று இதுபற்றி குமார் கார்த்திகேயா மேலும் தெரிவித்தார். ஐபிஎல் என்பது ஒரு சாதாரண விளையாட்டு தொடர் என்பதையும் தாண்டி நிறைய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு உன்னத அதிர்ஷ்டம் கலந்த தொடராக இருப்பது இதிலிருந்து மீண்டும் நிரூபணமாகியுள்ளது.