ஐ.பி.எல் வரலாற்றில் மிகமோசமான சாதனையை படைத்து முதல் அணியாக வெளியேறும் மும்பை – விவரம் இதோ

MI Mumbai Indians
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 10 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மனிஷ் பாண்டே 22 (22) ரன்களில் மெதுவாக பேட்டிங் செய்து பின்னடவை ஏற்படுத்தினார். அந்த நிலைமையில் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 0 (3) க்ருனால் பாண்டியா 1 (2) தீபக் ஹூடா 10 (9) ஆயுஷ் படோனி 14 (11) என அனைத்து வீரர்களும் பொறுப்பில்லாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

KL Rahul 103

ஆனால் அந்த அனைத்து சரிவையும் தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி ஆரம்பம் முதலே நங்கூரமாக நின்று மும்பை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 4 சிக்சர் உட்பட சதமடித்த ராகுல் 103* ரன்கள் விளாசி இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். மும்பை சார்பில் பொல்லார்ட் மற்றும் மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

மும்பை மீண்டும் தோல்வி:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட முதல் விக்கெட்டுக்கு 39 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 8 (20) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த தேவால்டு ப்ரேவிஸ் 3 (5) நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 7 (7) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 67/4 என தடுமாறிய மும்பையை அடுத்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோர் வெற்றி பெற வைக்க போராடினார்கள்.

MI vs LSG

5-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 57 ரன்களை எடுத்த இந்த ஜோடியில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (27) ரன்கள் எடுத்த திலக் வர்மா கடைசி நேரத்தில் அவுட்டானார். அப்போது காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்டும் கடைசி ஓவரில் 19 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 20 ஓவர்களில் 142/8 ரன்களை மட்டுமே எடுத்து மும்பை பரிதாபமாக தோற்றது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட லக்னோ 8 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

மோசமான மும்பை:
மறுபுறம் ஏற்கனவே தனது முதல் 7 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியிலாவது வெல்லுமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வெறும் 169 என்ற எளிமையான நல்ல இலக்கைத் தொட முடியாத அளவுக்கு மோசமான பேட்டிங் செய்த அந்த அணி 8-வது தோல்வியை பதிவு செய்து ரசிகர்களை கடுப்பேற்றியது. இப்படி 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்த காரணத்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை பதிவு செய்த முதல் அணி என்ற படுமோசமான அவமானம் நிறைந்த சாதனையை மும்பை படைத்தது.

Mi Mumbai

இதனால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த அதே ரோகித் சர்மா தலைமையிலான மும்பையா இது என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இந்த தொடர் தோல்விகளால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் மும்பை முதல் அணியாக வெளியேறுவது 99.99% உறுதியாகியுள்ளது.

- Advertisement -

கோடையிலும் எடுபடாத ஆட்டம்:
முன்னதாக இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடைபெறுவதால் சென்னை உட்பட இதர 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடும் பொன்னான வாய்ப்பு மும்பைக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் அதையும் வீணடிக்கும் வகையில் தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை நேற்று முதல் முறையாக தனது கோட்டையான மும்பை வான்கடே மைதானத்தில் 3 வருடங்கள் கழித்து களமிறங்கியதால் நிச்சயம் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க : தமிழக வீரர் நடராஜனால் நிச்சயம் அது முடியும். மீண்டும் இந்தியன் டீம்ல அவரை சேருங்க – கவாஸ்கர் ஆதரவு

ஆம் கடந்த 2020, 2021 ஐபிஎல் தொடர்கள் துபாயில் நடைபெற்ற நிலையில் கடைசியாக கடந்த 2019 ஐபிஎல் தொடரில்தான் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் விளையாடியது. அதன்பின் 3 வருடங்கள் கழித்து தனது கோட்டையில் விளையாடிய போதிலும் மோசமான ஆட்டத்தால் மீண்டும் மும்பை மண்ணைக் கவ்வியுள்ளது.

Advertisement