262 ரன்ஸ் சேசிங்.. கொல்கத்தாவை சொந்த மண்ணில் ஓடவிட்ட பஞ்சாப்.. தெ.ஆ அணியை முந்தி மெகா உலக சாதனை வெற்றி

KKR vs PBKS 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் 41வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே சுனில் நரேன் – பில் சால்ட் ஜோடி ஆரம்பத்திலேயே பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக முதல் 7 ஓவர்களுக்குள் இந்த ஜோடி கொடுத்த 3 கேட்ச்களை பஞ்சாப் வீரர்கள் தவற விட்டனர். அதை பயன்படுத்தி அரை சதமடித்து அற்புதமாக விளையாடிய இந்த ஜோடி 10.2 ஓவரில் 138 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கம் கொடுத்தது. அதில் சுனில் நரேன் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 71 (31) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் பில் சால்ட் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 75 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மெகா உலக சாதனை:
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர் 39 (23), ஆண்ட்ரே ரசல் 24 (12), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 (10) ரன்களை அதிரடியாக எடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் கொல்கத்தா 261/6 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 262 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஓப்பனிங்கில் ஜானி பேர்ஸ்டோ – பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினார்கள்.

குறிப்பாக ப்ரப்சிம்ரன் சிங் கொல்கத்தா பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 18 பந்துகளில் அரை சதமடித்தார். அந்த வகையில் 6 ஓவரில் 93 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்த அவர் துரதிஷ்டவசமாக 54 (20) ரன்களில் ரன் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜானி பேர்ஸ்ட்டோ இந்த சீசனில் முதல் முறையாக அபாரமாக விளையாடி 23 பந்துகளில் அரை சதமடித்தார்.

- Advertisement -

ஆனால் அவருடன் அடுத்ததாக சேர்ந்து விளையாடிய ரிலீ ரோசவ் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 26 (16) ரன்களில் சுனில் நரேன் சுழலில் சிக்கினார். அப்போது வந்த சசாங் சிங் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து கொல்கத்தா பவுலர்களுக்கு கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய ஜானி பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதமடித்தார்.

அதே போல எதிர்ப்புறம் தம்முடைய பங்கிற்கு பட்டாசாக விளையாடிய சசாங் சிங் 2 பவுண்டரி 8 சிக்ஸருடன் 68* (28) ரன்கள் குவித்தார். அவருடன் மறுபுறம் பிதாமகன் போல மிரட்டிய ஜானி பேர்ஸ்டோ 8 பவுண்டரி 9 சிக்சருடன் 108* (48) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே பஞ்சாப் 262/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்யாசத்தில் வென்றது. இதன் வாயிலாக ஐபிஎல் மட்டுமின்றி ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பஞ்சாப் மாஸ் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: லெவல் தெரியாமா விமர்சிக்காதீங்க.. அது ஐபிஎல் இல்ல.. விராட் கோலியை அந்த இடத்தில் எறக்குங்க.. ஸ்ரீகாந்த்

இதற்கு முன் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் தென்னாப்பிரிக்கா 259/4 ரன்கள் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அதனால் 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் படுமோசமாக பந்து வீசிய கொல்கத்தா சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்தது.

Advertisement