மொத்தமாக டேமேஜான சிஎஸ்கே அணி.. போற போக்கை பாத்தா பிளே ஆஃப் போகுமா? ரசிகர்கள் கவலை

CSK Bowlers
- Advertisement -

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் சென்னை பிளே ஆஃப் செல்வதற்கு அடுத்த 3 போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஒருவேளை குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் சென்னை அடுத்த 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முக்கிய வீரர்களின் காயம் சென்னை அணியை மொத்தமாக காயப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். முதலில் கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 5வது கோப்பை வெல்ல உதவிய டேவோன் கான்வே இம்முறை காயத்தால் வெளியேறினார்.

- Advertisement -

சென்னை சாதிக்குமா:
அதனால் ரச்சின் ரவீந்தராவை வைத்து சென்னை அணி நிலைமையை சமாளிக்கத் துவங்கியது. ஆனால் ஓரிரு போட்டிகளுக்கு பின் அவர் சுமாராக விளையாடியதால் நீக்கப்பட்டார். அப்போதிலிருந்து இதுவரை சென்னை அணிக்கு ஓப்பனிங் ஜோடி நன்றாக அமையாதது மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. அந்த நிலையில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் ஜிம்பாப்வே தொடரில் நாட்டுக்காக விளையாடுவதற்காக சென்னை அணியிலிருந்து வெளியேறினார்.

அதே போல 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் மீண்டும் காயமடைந்து வெளியேறினார். போதாகுறைக்கு தற்போது மதிஷா பதிரனாவும் காயத்தால் எஞ்சிய ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை மொத்தமாக டேமேஜாகி உள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இப்போதைய நிலைமையில் சர்தூள் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவத்துடன் வேகப்பந்து வீச்சு துறையில் காயமின்றி மீதமிருக்கின்றனர். ஆனால் அவர்களும் அவ்வப்போது வள்ளலாக ரன்களை வாரி வழங்கக் கூடியவர்கள் என்பதை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் “போகிற போக்கை பார்த்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினமாக இருக்கும் போலயே” என்று சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: இங்க தோத்துருக்கலாம்.. ஆனா அங்க பட்டாசா விளையாடி பிளே ஆஃப் வருவோம்.. எச்சரித்த கேப்டன் கமின்ஸ்

இருப்பினும் இதே சர்துல் தாகூர், தேஷ்பாண்டே போன்ற வீரர்களை வைத்து சென்னை அணி 2018, 2021, 2023 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் அசத்திய சிமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி போன்ற தரமான இளம் பவுலர்களை வைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை போராடும் என்று உறுதியாக நம்பலாம். அதை செய்து புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் கோப்பையை வென்று சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement