மும்பையின் எம்ஐ கிட்ட முடியுமா? ஆர்சிபியின் 49 ஆல் அவுட் சாதனையை ஜஸ்ட் மிஸ் செய்த ரசல் அணி – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

அமெரிக்காவில் முதல் முறையாக இந்த வருடம் உருவாக்கப்பட்டுள்ள மேஜர் லீக் எனும் புதிய டி20 கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் தொடர்களில் அணிகளை வைத்துள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நிர்வாகங்கள் தங்களுடைய கிளை அணிகளை வாங்கியுள்ளன. அதனால் ஐபிஎல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் மற்றும் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டன் பொல்லார்ட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தேவாலட் ப்ரேவிஸ் 15 (7) ஜஹாங்கீர் 4 (8) மோனக் படேல் 4 (7) ஹமத் அசாம் 8 (18) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். போதக்குறைக்கு கேப்டன் பொல்லார்ட் 5 (9) ரன்களில் அவுட்டானதால் 77/5 என சரிந்து பெரிய பின்னடைவை சந்தித்த எம்ஐ அணிக்கு மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரானும் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (37) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

பரிதாபம் ஏஞ்சல்ஸ்:
இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் சரவெடியாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் 48 (21) ரன்கள் விளாசி போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதால் தப்பிய எம்ஐ 20 ஓவர்களில் 155/8 ரன்கள் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா, அலி கான், கார்னே ட்ரை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 156 என்ற சுலபமான இலக்கை துரத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே மார்ட்டின் கப்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க ரிலீ ரோசவ் 2 (8) நிதிஷ் குமார் 0 (3) என 2 முக்கிய வீரர்களை நட்சத்திர வீரர் ரபாடா 3வது ஓவரில் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மல்கோத்ரா 5 (10) ரன்களில் பெவிலியன் திரும்ப மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த உன்முக்த் சந்த்தும் 26 (26) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் 37/5 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த அந்த அணியை ஓரளவு காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசலும் 1 (6) ரன்களில் பொல்லார்ட் வேகத்தில் அவுட்டாகி கைவிட்டார்.

- Advertisement -

அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் 13.5 ஓவர்களிலேயே வெறும் 50 ரன்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை சுருட்டி 105 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற எம்ஐ நியூயார்க் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், காகிஸோ ரபாடா, கைரன் பொல்லார்ட், ஈஸான் அடில், நோஸ்துஸ் கெஞ்சிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் வாயிலாக இந்த மேஜர் லீக் தொடரில் பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக எம்ஐ நியூயார்க் சாதனை படைத்த நிலையில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக லாஸ் ஏஞ்சல்ஸ் படுமோசமான சாதனையை படைத்தது.

அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக மோசமான சாதனை படைத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 49 ஆல் அவுட் சாதனையை தன்வசமாக்குவதிலிருந்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் அந்த அணி எஸ்கேப் ஆனது. இதில் ஆச்சரியம் என்னவெனில் ஐபிஎல் தொடரில் பெங்களூருவை 49க்கு ஆல் அவுட்டாக்கிய கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் இத்தொடரில் இப்படி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவின் மேட்ச் வின்னராக தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்த கிங் கோலி – சச்சினை முந்த பிரகாச வாய்ப்பு

அதனால் அந்த அணியை வழக்கம்போல நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 48 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் 2 போட்டிகளில் முதல் வெற்றியை பதிவு செய்த எம்ஐ நியூயார்க் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் கடைசி இடத்திற்கு பின்தங்கியது.

Advertisement