
ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டானர். அடுத்து வந்த தேவுட் படிக்கல் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 48/2 என சுமாரான தொடக்கம் பெற்ற ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து தனது அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிரடியாக விளையாடினார். 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்து ராஜஸ்தானை வலுப்படுத்திய இந்த ஜோடியில் 21 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 30 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் அவுட்டானார்.
பட்லர் அபார சதம்:
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் தன் பங்கிற்கு 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு வெறும் 14 பந்துகளில் 35 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மைதானத்தில் அப்படியே நங்கூரமாக நின்று மும்பை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்களை விளாசி கொண்டிருந்தார்.
19-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா அவரை அவுட் செய்து முடிப்பதற்குள் விஸ்வரூபம் எடுத்து மும்பையை புரட்டியெடுத்த ஜோஸ் பட்லர் வெறும் 68 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்ஸர்கள் உட்பட சதம் அடித்து 100 ரன்கள் விளாசிய பின் ஆட்டமிழந்தார். அவரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 193/8 ரன்களை எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
மும்பை பரிதாப தோல்வி:
அதை தொடர்ந்து 194 என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பில்லாமல் 10 (5) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த இளம் வீரர் அன்மொல்பிரீட் சிங் 5 ரன்களில் நடையை கட்டினார். இதனால் 41/2 எனக் தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற மும்பைக்கு மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் திலக் வெர்மா அதிரடியாக ரன்களை குவித்தார். 3-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் குவித்து மும்பையை மீட்டெடுத்த இந்த ஜோடியில் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்த இசான் கிசான் 54 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அடுத்த சில ஓவர்களிலேயே வெறும் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த திலக் வர்மா முக்கியமான நேரத்தில் அவுட்டானார். அந்தப் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திய ராஜஸ்தான் அடுத்து வந்த அதிரடி வீரர்கள் டீம் டேவிட்டை 1 ரன்னில் அவுட் செய்து டேனியல் சாம்சை டக் அவுட் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது. கடைசி நேரத்தில் களமிறங்கிய கைரன் போல்லார்ட் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் 24 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 22 ரன்களில் அவரும் நம்பிக்கையைக் கொடுத்து அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170/8 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோல்வி அடைந்தது.
பழைய மாஸ் இல்லை:
மறுபுறம் முதலில் பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் அதன்பின் பந்துவீச்சில் மிரட்டியதால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது. அந்த அணி சார்பில் பந்துவீச்சில் கலக்கிய நவ்தீப் சைனி மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஐபிஎல் 2022 தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்த வெற்றிக்கு சதமடித்து வித்திட்ட ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக இந்த தொடரில் டெல்லிக்கு எதிரான தனது முதல் போட்டியிலும் தோல்வியடைந்த மும்பை இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்து இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை தழுவியது. மேலும் இதுவரை 5 கோப்பைகளை வென்று வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பையில் கடந்த வருடங்களில் ஹர்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற ஒருசில முக்கிய வீரர்கள் இந்த வருடம் இல்லாத காரணத்தால் அந்த அணியில் இருந்த பழைய மாஸ் இல்லை என சமூக வலைதளங்களில் கூறும் பெரும்பாலான ரசிகர்கள் இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு அதுதான் காரணம் என பேசுகின்றனர்.
இதையும் படிங்க : நள்ளிரவு 2 மணிக்கு பந்துவீச சொன்னால் கூட கபில் தேவ் மாதிரி ஷமியால் அந்த பந்தை வீசமுடியும் – ரவிசாஸ்திரி
அத்துடன் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னையும் இதேபோல இந்த வருடம் பங்கேற்ற முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளுடன் தவித்து வருகிறது. அந்த நிலையில் சென்னைக்கு தோள்கொடுக்கும் தோழனாக மற்றொரு வெற்றிகரமான ஐபிஎல் அணியான மும்பை கம்பெனி கொடுக்க வந்து விட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கலகலப்பாக பேசுகின்றனர்.