எப்பா நீ கிரேட் பிளேயர் தான், இந்தியாவுக்கு சவாலை கொடுத்த வங்கதேச வீரருக்கு இறுதியில் கிங் கோலி கொடுத்த அன்பு பரிசு

- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இழந்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றி தக்க பதிலடி கொடுத்து. அதனால் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் காலத்திற்கும் இந்திய அணியினரும் ரசிகர்களும் மறக்க முடியாத அளவுக்கு வங்கதேச வீரர் மெஹதி ஹசன் தொடர்ச்சியான பயத்தை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக தாக்கா கிரிக்கெட் மைதானம் அவருடைய கோட்டையாக திகழ்ந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா நிர்ணயித்தை வெறும் 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 8வது இடத்தில் களமிறங்கி கேஎல் ராகுல் தவற விட்ட கேட்ச்சை பயன்படுத்திய மெஹதி ஹசன் 38* (39) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்து வங்கதேசத்திற்கு 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கொடுத்தார்.

- Advertisement -

பாராட்டிய கிங்:
அதன் பின் நடைபெற்ற 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 69/6 என திண்டாடியது. ஆனால் அப்போது முகமதுல்லாவுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அவர் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 100* (83) ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் வங்கதேசம் நிர்ணயித்த 272 ரன்களை வெற்றிகரமாக துரத்த முடியாமல் 5 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் கடைசி நேரத்தில் சொதப்பி தோற்ற இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்த 2 ஒருநாள் தொடர்களில் (2015, 2022) தோல்விகளை சந்தித்தது.

அதை தொடர்ந்து சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இசான் கிசான் இரட்டை சதத்தால் எளிதாக வென்ற இந்தியா அதே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் 188 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஆனால் மீண்டும் கோட்டையான தாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய மெஹதி ஹசன் சுப்மன் கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1, அக்சர் படேல் 34, ரிஷப் பண்ட் 9 என 5 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் சவாலுக்கே சவால் கொடுத்த தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் அவரது ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசி மொத்தம் 42* ரன்கள் குவித்து இம்முறை இந்தியாவை அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றினார். மொத்தத்தில் “எப்பா சாமி போதும்” என்று இந்திய ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இந்த தொடரில் மெஹதி ஹசன் சிம்ம சொப்பனமாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

அப்படி இந்த சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து கடைசி இன்னிங்சில் தம்மையும் வெறும் 1 ரன்னில் அவுட்டாக்கிய திறமையால் வியந்த விராட் கோலி தாம் கையொப்பமிட்ட தன்னுடைய ஜெர்சியை தாமாக முன் சென்று மெஹதி ஹசனுக்கு பரிசளித்துள்ளார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மெஹதி ஹாசன் “சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு” என்ற தலைப்புடன் பொன்னான தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ராகுல் டிராவிட் கோச்சா இருந்தும் இந்த தப்பு நடக்குறது ஆச்சரியமா இருக்கு – சுனில் கவாஸ்கர் விளாசல்

இறுதியில் இருவரும் கட்டிப்பிடித்து சிரித்த முகத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். தற்சமயத்தில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலி தங்களது நாட்டு சூப்பர் ஸ்டாரின் திறமையை மதித்து தாமாக முன்வந்து கையொப்பமிட்ட ஜெர்ஸி பரிசளித்ததை பார்த்த வங்கதேச ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவிக்கிறார்கள்.

Advertisement