
பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024/25 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்த இந்தியா 2018/19ஆம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் வெற்றி கண்டது.
அதே போல 2020/21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அங்கிருந்து ரஹானே தலைமையில் அபார கம்பேக் கொடுத்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 3வது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போல செட்டேஸ்வர் புஜாரா தரத்தைக் கொண்டவர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக புஜாரா மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் விளையாடி ஆர்வத்தை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஹைடன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவர் இம்முறை விளையாட மாட்டார் என்பதால் இந்தியா வெல்வது கடினம் என்றும் ஹைடன் எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புஜாரா போன்றவர் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் கண்டிப்பாக அசத்துவார் என்று நீங்கள் பெட் கட்டலாம். அவர் ஆர்வத்தை ஏற்படுத்துவாரா? என்று கேட்டால் இல்லை. அவர் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று கேட்டால் கண்டிப்பாக ஆம். கடந்த காலங்களில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர்களை திரும்பிப் பாருங்கள்”
“அவர்கள் எங்களுடைய மார்க்கெட்டில் கண்டிப்பாக அசத்துவார்கள். ஆஸ்திரேலியாவில் ரன்கள் பிரீமியமாகத் தான் வரும். எனவே அங்கு சிறந்தவர்கள் உயர்ந்து நிற்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக 2018/19 தொடரில் 521 ரன்கள் அடித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்று ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் கிடையாது.. ஆஸ்திரேலியாவில் சிக்கிடுவீங்க.. அதையும் தாண்டி அவர் அசத்துறாரா பாக்குறேன்.. ஹைடன் பேட்டி
அதே போல 2020/21 தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடி வாங்கி பாறையைப் போல் நின்ற புஜாரா மீண்டும் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதன் பின் பெரிய ரன்கள் எடுக்காததால் அவரை பிசிசிஐ கழற்றி விட்டது. மேலும் அடுத்த நடைபெறும் துலீப் கோப்பையில் புஜாரா தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் இம்முறை ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா தேர்வு செய்யப்படுவதற்கு 99% வாய்ப்பில்லை.